ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருக்கிறது. கேப்டனாக எம்எஸ் தோனி இருந்தாலும், அவர் ஆடப்போகும் கடைசி ஐபிஎல் போட்டி 2024 என்பது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. அதுவும் அவர் விளையாடினால் மட்டுமே, இல்லையென்றால் தோனி களமிறங்காமல் போகவும் வாய்ப்பு உள்ளது. முழங்கால் வலியால் அவதிப்பட்டு வரும் தோனி, கடந்த ஆண்டே களத்தில் பல முறை வலியால் துடிதுடித்தார். அப்போது, ஐபிஎல் ஓய்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, நான் விளையாட தயாராக தான் இருக்கிறேன், என்னுடைய உடல் அதற்கு ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்தார். ஐபிஎல் இறுதிப் போட்டி முடிந்தபிறகு முழங்கால் வலிக்கு பிரத்யேகமாக சிகிச்சையும் எடுத்துக் கொண்டார். இருப்பினும் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடுவது குறித்து தோனி திட்டவட்டமாக ஏதும் தெரிவிக்கவில்லை.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகமும் தல தோனி நிச்சயம் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடுவார் என ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்து வருகிறது. ஆனால், ரசிகர்களுக்கு தோனி விளையாடுவாரா? இல்லையா? என்ற சந்தேகம் முன்னெப்போதையும் விட கொஞ்சம் பலமாகவே இருக்கிறது. அவருக்கு அடுத்தபடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஹிட் லிஸ்டில் இருப்பவர் பென் ஸ்டோக்ஸ். அவரை ஏலத்தில் அதிக விலை கொடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கினாலும், அதற்கு ஏற்ப ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. அவரின் திறமை மீது சிஎஸ்கேவுக்கு எந்த சந்தேகம் இல்லை என்றாலும், அது களத்தில் வெளிப்படவில்லை என்ற ஆதங்கம் அந்த அணி நிர்வாகத்துக்கு இருக்கிறது. இதனால் அவரை அணியில் இருந்து விடுவித்துவிடலாமா? என்ற யோசனையில் இருக்கிறது.
அவருக்கு அடுத்தபடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலகப்போவது மொயீன் அலி. ஆல்ரவுண்டராக இருக்கும் இவர் மீது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நம்பிக்கை வைத்திருந்தாலும் அணியில் இருந்து விடுவித்துவிட்டு ஏலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறது. ஏற்கனவே அம்பத்தி ராயுடு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்டார். இதனால் அவருடைய இடத்துக்கு ஏற்ற வீரரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேடிக் கொண்டிருக்கிறது. கூடவே விரைவில் அணியில் இருந்து விலகப்போகும் இந்த முக்கிய வீரர்களுக்கான இடத்தை நிரப்பும் அளவுக்கான வீர்ரகளையும் கமுக்கமாக நோட்டமிட்டுக் கொண்டிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.