பெங்களூரு, : வாரிய தலைவர் பதவியை பிடிக்க, ஆதரவாளர்களை போராட்டம் நடத்த வைக்க, காங்கிரஸ் மூத்த எம்.எல்.ஏ.,க்கள் முடிவு செய்துள்ளனர்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மூத்த எம்.எல்.ஏ.,க்களை புறக்கணித்து விட்டு, இளையவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அதிருப்தி அடைந்த மூத்த எம்.எல்.ஏ.,க்கள், அரசை விமர்சித்து வருகின்றனர்.
அமைச்சர் பதவிக்கு இணையான வாரிய தலைவர் பதவியை கேட்கின்றனர். இந்நிலையில் வாரிய தலைவர் பதவிகளை நிரப்ப, கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது. தசரா முடிந்ததும், வாரிய தலைவர் பதவிகளை நிரப்புவது குறித்து, முதல்வர் சித்தராமையாவுடன் பேசுவதாக துணை முதல்வர் சிவகுமார் கூறியுள்ளார்.
இதனால் வாரிய தலைவர் பதவியை பிடிக்க மூத்த எம்.எல்.ஏ.,க்கள் இடையில், கடும் போட்டி எழுந்தது. முதல்வர், துணை முதல்வரின் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், வாரிய தலைவர் பதவியை பிடிக்க, வரிந்து கட்டி நிற்கின்றனர்.
இந்நிலையில் ஹூப்பள்ளி – தார்வாட் கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., அப்பய்யா பிரசாத்திற்கு, வாரிய தலைவர் பதவி வழங்க கோரி, அவரது ஆதரவாளர்கள் துணை முதல்வர் சிவகுமார் வீடு முன்பு போராட்டம் நடத்தினர். இதே பாணியை கடைப்பிடிக்க, மூத்த எம்.எல்.ஏ.,க்கள் திட்டம் வைத்து உள்ளனர்.
போராட்டம் நடத்தி நெருக்கடி கொடுத்து, வாரிய தலைவர் பதவியை வாங்கி விடலாம் என்று, கணக்கு போடுகின்றனர். இவர்களின் திட்டம் நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement