புதுடில்லி, ‘தன் மணவாழ்க்கை துணையை தேர்வு செய்வது ஒருவருக்கான உரிமையாகும். இதில், பெற்றோர் உட்பட குடும்பத்தினர் யாரும் தலையிட முடியாது’ என, புதுடில்லி உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
புதுடில்லியைச் சேர்ந்த ஒரு தம்பதி, பெற்றோர் எதிர்ப்பை மீறி, கடந்த ஏப்., மாதத்தில் திருமணம் செய்து தனியாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், அந்த பெண்ணின் தாய் மற்றும் உறவினர்கள் மிரட்டுவதால், பாதுகாப்பு கேட்டு, அந்த தம்பதி வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இதை விசாரித்த புதுடில்லி உயர் நீதிமன்ற நீதிபதி துஷார் ராவ் கடேலா சமீபத்தில் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
இருவரும் திருமண வயதை எட்டியவர்கள். தங்களுடைய மணவாழ்க்கை துணையை தேர்வு செய்ய இருவருக்கும் உரிமை உள்ளது.
இது அரசியலமைப்பு சட்டத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தலையிட பெற்றோர் உட்பட உறவினர்கள் யாருக்கும் அதிகாரம் இல்லை.
மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது, போலீஸ் மற்றும் அரசின் பொறுப்பாகும்.
அதுபோல, அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள உரிமையை உறுதி செய்ய வேண்டியது நீதிமன்றத்தின் பொறுப்பாகும். அதன்படி, இந்த தம்பதிக்கு உரிய பாதுகாப்பை போலீஸ் வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement