தற்போது உள்ள காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. பெண்கள் எங்கு சென்றாலும் பயத்துடனும், பதற்றத்துடனுமேதான் செல்ல வேண்டியதாக இருக்கிறது. இந்த நிலையில், சிகிச்சைக்காக அணுகியப் பெண்ணை, 15 நாள்கள் வீட்டில் அடைத்துவைத்து மருத்துவரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா பகுதியைச் சேர்ந்த 19 வயதான இளம்பெண் ஒருவர், கடந்த இரண்டு மாதங்களாக கழுத்தில் சில பிரச்னைகளுடன் இருந்துள்ளார். சிகிச்சைக்காக காந்தி மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் தீபக் நாயக் (30) என்ற மருத்துவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். தொலைபேசியில் பேச தொடங்கிய தீபக், மருத்துவ சிகிச்சைக்காக அந்தப் பெண்ணை போபாலுக்கு அழைத்துள்ளார்.

போபாலுக்கு வந்த அந்தப் பெண்ணிடம் ஆசைவார்த்தைகளைக் கூறி கோயிலுக்கு அழைத்துச் சென்று, திருமணம் செய்துள்ளார். ஆனால், தீபக்குக்கு ஏற்கெனவே திருமணமாகி, மனைவி, குழந்தை இருக்கின்றனர். அவர்கள் இருவரும் ஒடிசாவில் இருந்ததால், போபாலில் இருக்கும் தன்னுடைய வீட்டுக்கு இளம்பெண்ணை அழைத்துச் சென்றிருக்கிறார். பின்னர், அங்கு அக்டோபர் 15 முதல் 28-ம் தேதி வரை அந்தப் பெண்ணை வீட்டில் அடைத்து வைத்தும், மிரட்டியும் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அங்கிருந்து தப்பித்து ஓடி வந்த பெண், போலீஸாரிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகளைத் தெரிவித்துள்ளார். வீட்டிலிருந்து பெண் தப்பி ஓடியதை அறிந்த மருத்துவர் தீபக், தலைமறைவாகியுள்ளார். அவர்மீது வழக்கு பதிந்து தேடி வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.