ஏற்றுமதிக்கு தடை : விண்ணை முட்டும் வெங்காயம் விலை!

நாட்டில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு தக்காளி விலை விவசாயிகளுக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும், பொதுமக்களுக்கு கவலையளிப்பதாகவும் இருந்தது. தற்போது தக்காளி விலை சரிந்துவிட்டது. தக்காளியை போன்று வெங்காயம் விலையும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

கடந்த மாதம் வெங்காயம் சில்லறை விலையில் ரூ.30 முதல் 40 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் இப்போது மும்பையில் சில்லறை கடைகளில் 80 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. மொத்த மார்க்கெட்டில் 50 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. மும்பைக்கு வாஷி ஏபிஎம்சி மார்க்கெட்டில் இருந்துதான் வெங்காயம் சப்ளையாகிறது. இது குறித்து அந்த மார்க்கெட்டின் இயக்குனர் அசோக் கூறுகையில்,” ஏபிஎம்சி மார்க்கெட்டில் வெங்காய விலை ரூ.60 ஆக அதிகரித்துள்ளது.

வெங்காயம்

சில்லறை விலை 100 ரூபாய் வரை செல்ல வாய்ப்பு இருக்கிறது. மார்க்கெட்டிற்கு வரும் வெங்காயத்தின் அளவு குறைந்திருக்கிறது. இந்த ஆண்டு காலம் தவறிய மழையால் வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மழை காலத்தில் பயிரிடப்பட்ட வெங்காயம் இன்னும் மார்க்கெட்டிற்கு வரவில்லை. மழை சேதம் மற்றும் கடுமையான வெயில் போன்ற காரணங்களால் அறுவடை தாமதம் அடைந்துள்ளது”என்றார்.

இது குறித்து மொத்த வியாபாரி ராஜேந்திர ஷெல்கே கூறுகையில்,” வாஷி மார்க்கெட்டிற்கு புனே, நாசிக், சோலாப்பூரில் இருந்து புதிய வெங்காய வரத்து தொடங்கிய பிறகுதான் விலை குறைய ஆரம்பிக்கும். தற்போது வாஷி மார்க்கெட்டிற்கு வரும் வெங்காயம் பழையது மற்றும் சேதம் அடைந்தது ஆகும். மும்பை மெட்ரோபாலிடன் பகுதிக்கு தினமும் 125 லாரி வெங்காயம் தேவை. ஆனால் இப்போது 70 லாரி மட்டும் தான் வருகிறது” என்று தெரிவித்தார்.

வெங்காயம்

மும்பை தவிர்த்து நாட்டில் வெங்காயம் விலை 57 சதவீதம் அதிகரித்து 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து மத்திய அரசு விவசாயிகளிடமிருந்து வாங்கி வைத்திருந்த வெங்காயத்தை கிலோ ரூ.25 என்ற விலையில் விற்பனை செய்து வருகிறது. மத்திய அரசு வெங்காய விலை அதிகரிக்கும் என்று கருதி ஏற்கனவே வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து இருக்கிறது. அப்படி இருந்தும் வெங்காயம் விலை அதிகரித்துள்ளது. வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டதற்கு விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.