கான் யூனிஸ்: காசாவில், ஒருபக்கம் வான்வழித் தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல், மறுபக்கம் தரைவழித் தாக்குதலை விரிவுபடுத்தி வருகிறது.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் ஒரு மாதமாக மோதல் நடக்கிறது. இதில், பாலஸ்தீனத்தில், குழந்தைகள், பெண்கள் உட்பட 8,000 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இஸ்ரேலில், 1,400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
காசாவில் வான்வழித் தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல், தற்போது படிப்படியாக, தரைவழித் தாக்குதலை விரிவுபடுத்தி வருகிறது. ஏற்கனவே, காசாவின் பல பகுதிகளுக்குள் ஊடுருவிய இஸ்ரேல் படைகள், ஹமாஸ் பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்களை குறிவைத்து அழித்தனர்.
இதற்கிடையே, காசாவில் மருத்துவமனைகள் மற்றும் தங்குமிடங்கள் அருகே, இஸ்ரேல் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தி வருவதாக, ஐ.நா., சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மக்கள் தங்கியுள்ள இடங்கள் மற்றும் மருத்துவமனை அருகே தாக்குதல் நடப்பதால், காசாவில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், காசாவின் வடக்கு பகுதியில், இஸ்ரேல் படைகள் ஊடுருவி உள்ளன. இது தொடர்பான வீடியோ, இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது.
அதில், காசாவில் இஸ்ரேல் ராணுவ வாகனங்கள் ரோந்து செல்வதும், கட்டடங்கள் மற்றும் வீடுகளில், ராணுவ வீரர்கள் தயார் நிலையில் இருப்பதும் தெரிகிறது. இதற்கிடையே, கடந்த சில நாட்களில், காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகளின் 600க்கும் மேற்பட்ட பதுங்குமிடங்களை அழித்ததாக, இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, ஹமாஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட, ஐரோப்பிய நாடான ஜெர்மனைச் சேர்ந்த ‘டாட்டூ’ கலைஞர் ஷானி லுாக் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக, இஸ்ரேல் நேற்று தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்