வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களங்களின் அனுசரணையில், கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டுப் பேரவையும் மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்தும் பண்பாட்டுப் பெருவிழா இன்று (03.11.2023) காலை 9.00 மணியளவில் இடம்பெறவுள்ளது.
குறித்த நிகழ்வு, கிளிநொச்சி மாவட்ட திறன் விருத்தி நிலைய கலாசார மண்டபத்தில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரும், பண்பாட்டுப் பேரவைத் தலைவருமான றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.
மேற்படி விழாவில் யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக தொழிநுட்பப் பீடத்தின் பீடாதிபதி சிவமதி சிவச்சந்திரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார்.
மேலும், சிறப்பு விருந்தினர்களாக கிளிநொச்சி வடக்கு வலயக்கல்விப் பணிப்பாளர் ஆ.சிவனருள்ராஜா, கிளிநொச்சி தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் கி.கமலராஜன், வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் லாகினி நிருபராஜ் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
கெளரவ விருந்தினர்களாக கலாபூஷணம் வ.ஏழுமலைப்பிள்ளை (கரைச்சி), கலாபூஷணம் ம.கறுப்பையா (பச்சிலைப்பள்ளி), கலைநகரி காசிப்பிள்ளை குலசேகரம் (பூநகரி), கலாபூஷணம் ந. சிவபாலசுப்பிரமணியம் (கண்டாவளை), எழுத்தாளர். ரதிதேவி கந்தசாமி (தாமரைச் செல்வி), எழுத்தாளர் சி.கருணாகரன், எழுத்தாளர் கலாபூஷணம் சி.தமயந்தி(தமிழ்க்கவி), எழுத்தாளர் பா. பார்த்தீபன்(தீபச்செல்வன்) ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந் நிகழ்வில் முன்னைய மாவட்ட செயலக வளாகத்திலிருந்து விழா மண்டபம் வரை மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் தமிழ் இன்னிய அணியுடன் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து அமரர் கலைக்கிளி செல்வி நடனவதி முருகேசு அரங்கில் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
அமரர் கலைக்கிளி செல்வி நடனவதி முருகேசு அரங்கு பெயரில் அமைந்த அரங்கின் திறப்புரையைக் கண்டாவளைபிரதேச கலைஞர் கவிஞர் அ.கேதீஸ்வரன் நிகழ்த்துவார்.
விழாவில் கலைஞர்களுக்கான கலைக்கிளி, இளங்கலைஞர் விருதுகள் வழங்கலும், பாடசாலை மாணவர்கள், பிரதேசக் கலைஞர்களின் பல்வேறு கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.
எனவே கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டுப் பெருவிழாவில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு விழா ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.