சிக்கலில் Bigg Boss பிரபலம்; பாம்பு விஷம் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் வளைக்கும் போலீஸ்!

பிக் பாஸ் தமிழ் சீசன்களுக்கு எப்படி ரசிகர் பட்டாளம் ஏராளமோ, அதேபோலத்தான் சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக் பாஸ் சீசன்களுக்கும் மவுஸ் அதிகம். பிக் பாஸ் போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கையை பிக் பாஸுக்கு முன்பு, பிக் பாஸுக்குப் பின்பு எனப் பிரித்துக் கூறும் அளவுக்கு, அவர்களை மக்களிடையே பிரபலப்படுத்தும் இந்த நிகழ்ச்சி. இந்த நிலையில், இந்தியில் ஓ.டி.டி தளங்களில் வெளியான பிக் பாஸ் இரண்டாவது சீசனின் வெற்றியாளரும், பிரபல யூடியூபருமான எல்விஷ் யாதவ் மீது, ரேவ் பார்ட்டியில் பாம்பு விஷத்தை சப்ளை செய்ததாக வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

பிக்பாஸ் பிரபலம் எல்விஷ் யாதவ்

நொய்டாவிலுள்ள பண்ணை வீடுகளில் நடைபெறும் ரேவ் பார்ட்டியில் பாம்புகள் துன்புறுத்தப்பட்டு வீடியோக்கள் பதிவுசெய்யப்படுவதாகவும், பார்ட்டியில் பங்குபெறும் நபர்களுக்குத் தடைசெய்யப்பட்ட பாம்பு விஷங்கள் விற்கப்படுவதாகவும் வனத்துறை அலுவலர்களுக்கு `People For Animal’ (PFA) அமைப்பின் விலங்குகள் நல அதிகாரி கௌரவ் குப்தா தகவல் தெரிவித்தார். அதன்பேரில் நொய்டா வனத்துறை காவலர்களும், PFA தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரும் இணைந்து, பார்ட்டி நடைபெற்ற இடத்தில் சோதனை நடத்தினர்.

சோதனையில் பார்ட்டியிலிருந்து ஐந்து நாகப்பாம்புகள், இரட்டை தலை பாம்புகள், ஒரு சிவப்பு நிற பாம்பு, ஒரு மலைப்பாம்பு என ஒன்பது பாம்புகளும், 25 மில்லி தடைசெய்யப்பட்ட பாம்பு விஷமும் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக ஐந்து பேரைக் கைதுசெய்து விசாரணை நடத்தியதில், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றுக்காக வீடியோ எடுக்கப் பாம்புகள் பயன்படுத்தப்பட்டதையும், பாம்பு விஷம் அதிக விலைக்கு விற்கப்பட்டதையும் கைதானவர்கள் ஒப்புக்கொண்டனர்.

பிக் பாஸ் பிரபலம் எல்விஷ் யாதவ்

இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலுடன் பிக் பாஸ் பிரபலம் எல்விஷ் யாதவுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. இதற்கு முன்னரே, பாம்புடன் எல்விஷ் வீடியோ ஒன்றையும் சமூக வலைதளத்தில் பதிவேற்றியிருந்தார். இந்த நிலையில் எல்விஷ் உட்பட 6 பேர்மீது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டப்பிரிவுகள் 9, 39, 49, 50, 51 மற்றும் ஐ.பி.சி பிரிவு 120 ஆகியவற்றின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே 5 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கும் நிலையில், எல்விஷ் யாதவை போலீஸார் தேடி வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்தச் சம்பவத்துக்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்திருக்கும் எல்விஷ், “காலையில் எழுந்தவுடன் , நான் போதைப்பொருள்களுடன் பிடிபட்டு, கைதுசெய்யப்பட்டேன் என்ற போலி செய்தியைப் பார்த்தேன். இந்த தகவல்கள், என்மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் போலியானவை. இது எனது நற்பெயருக்குக் கலங்கம் ஏற்படுத்தத் தீட்டிய சதித்திட்டம். இது தொடர்பான அனைத்துவித விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பு வழங்குவேன்” என்று தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டிருக்கும் வீடியோவில் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.