உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மினி அரையிறுதி என பார்க்கப்படும் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மோதுகின்றன. இப்போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என? எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்திய அணி இதுவரை ஒரு தோல்வி கூட சந்திக்காத அணி, தென்னாப்பிரிக்கா அணி எதிர்பாராமல் நெதர்லாந்து அணியிடம் மட்டும் தோல்வியை தழுவியதுடன், அதன்பிறகு எந்த தோல்வியையும் சந்திக்காத அணி. இரு அணிகளும் பேட்டிங், பவுலிங் என சரிசம பலத்துடன் களம் காண இருக்கின்றன. இரு அணிகளும் உலக கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டாலும், இருவரில் யார் பலம் வாய்ந்த அணி என காண்பிக்க வேண்டிய இடத்தில் விளையாட உள்ளன.
ஜொலிக்கும் இந்திய அணி
இந்திய அணியில் பேட்டிங்கில் இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை. டாப் ஆர்டரில் ரோகித் சர்மா, இஷான் கிஷன், விராட் கோலி மற்றும் மிடில் ஆர்டரில் கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் இருக்கின்றனர். ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா உலக கோப்பையில் இருந்து விலகியது இந்திய அணிக்கு பின்னடைவு என்றாலும் ஜடேஜா, ஷர்துல் தாக்கூர் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கின்றனர். பவுலிங்கில் பும்ரா, சிராஜ், முகமது சிராஜ் ஆகியோர் டாப் கிளாஸ் பார்மில் இருக்கிறார்கள். சுழற்பந்துவீச்சில் குல்தீப் யாதவ், அஸ்வின் இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக அனைவரும் ஜொலிப்பதால் இதுவரை இந்திய அணி தோல்வியே சந்திக்கவில்லை.
தென்னாப்பிரிக்கா அட்டகாசம்
தென்னாப்பிரிக்கா அணியில் டிகாக் உட்சபட்ச பார்மில் இருக்கிறார். இந்த உலக கோப்பையில் இதுவரை 4 சதங்கள் விளாசியிருக்கிறார். கேப்டன் பவுமா பெரிய அளவு ஆடவில்லை என்றாலும், வாண்டர் துசென், மார்கிரம், கிளாசன், மில்லர், ஜேன்சன் வரை பேட்டிங் இருக்கிறது. பந்துவீச்சில் ரபாடா, லுங்கி நிகிடி, ஜேன்சன், கேசவ் மகாராஜ், ஷம்சி ஆகியோர் துல்லியமாக வீசிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் தென்னாப்பிரிக்கா அணியும் டாப் கிளாஸ் பார்மில் இருப்பதால், இந்திய அணியை வீழ்த்த செம ஸ்கெட்சுடன் களம் காண இருக்கின்றனர்.
இரு அணிகளிலும் பிளேயிங் லெவனில் யார் விளையாட போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்திய அணியில் பெரிய மாற்றம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த போட்டியில் விளையாடிய அணியே களம் காண அதிக வாய்ப்பு இருக்கிறது. தென்னாப்பிரிக்கா அணியிலும் பெரிய மாற்றம் இருக்காது.
வெற்றி வாய்ப்பு யாருக்கு?
இரு அணிகளும் சரிசம பலத்துடன் காணப்பட்டாலும் இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு ஒருபடி அதிகமாக இருக்கிறது. பேட்டிங், பவுலிங் எல்லாம் சீராக இருக்கிறது. அனைத்து பிளேயர்களும் சரிவிகித பங்களிப்பு செய்து கொண்டிருக்கின்றனர். தென்னாப்பிரிக்கா அணியில் பேட்டிங் சற்று தடுமாற்றமாகவே இருக்கிறது. யாரோ ஒருவர் திடீரென கை கொடுப்பதால் அந்த அணி தோல்வியில் இருந்து தப்பித்துக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியிலும் அப்படி யாராவது கை கொடுத்தால் மட்டுமே வாய்ப்பு. மற்றபடி இந்திய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்திவிட அதிக வாய்ப்பு இருக்கிறது.