நடப்பு உலகக்கோப்பையில் செல்லுமிடமெல்லாம் தங்களுக்கென புதிய வரலாறை எழுதிக் கொண்டிருக்கிறது ஆஃப்கானிஸ்தான்.
வான்கடேவிலும் ஆஸியை வீழ்த்தி தரமான சம்பவத்தை நிகழ்த்தி இன்னொரு வரலாற்று சாதனையை ஆஃப்கன் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான அறிகுறியும் ஆட்டம் முழுவதும் வெளிப்பட்டுக் கொண்டே இருந்தது. ஆனாலும்,

மேக்ஸ்வெல்லின் அசாத்தியமான போராட்டத்தால் ஆஃப்கானிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்றுப் போயிருக்கிறது. ‘சூப்பர் நேச்சுரல்!’ என்கிற ஒற்றை வார்த்தைக்குள் மேக்ஸ்வெல்லின் இன்னிங்ஸை அடக்காவிடலாம். அந்த அளவுக்கு ஒரு சூப்பர் ஹீரோத்தனமான இன்னிங்ஸைத்தான் மேக்ஸ்வெல் ஆடியிருந்தார்.

இன்றைய நாளில் அத்தனை விஷயங்களும் ஆஃப்கானிஸ்தானுக்கு சாதகமாகவே நடந்திருந்தது, அந்த மேக்ஸ்வெல்லின் விக்கெட்டை தவிர 280-290 ரன்களை எடுக்க வேண்டும் என்ற இலக்கோடுதான் பேட்டிங் ஆட வந்தது ஆஃப்கானிஸ்தான். வழக்கம்போல அவர்களின் ஸ்டைலில் இந்த இந்த ஓவர்களுக்குள் இவ்வளவு ரன்களை எடுக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தனர். இதனால் முதல் 40 ஓவர்களில் பெரிதாக எங்கேயும் அவசரப்படவே இல்லை. குறிப்பாக, அந்த முதல் 10 ஓவர்களை மிகச்சிறப்பாக கையாண்டனர். ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசல்வுட் என அபாயமான அட்டாக்கை நேர்த்தியான திட்டமிடலுடன் எதிர்கொண்டிருந்தனர். குர்பாஸ் மட்டும்தான் அந்த 10 ஓவர்களுக்குள் அவுட் ஆகியிருந்தார். ஹேசல்வுட் வீசிய ஒரு ஷார்ட் பாலை ஸ்கொயரில் அடிக்க முயன்று சரியாக ஃபீல்டரிடம் கையில் கொடுத்திருந்தார் குர்பாஸ்.
ஆஃப்கானிஸ்தான் அணி இந்த உலகக்கோப்பையில் 3 போட்டிகளில் தோற்றிருக்கிறது. அந்த 3 போட்டிகளிலுமே சில நல்ல பார்ட்னர்ஷிப்கள் அமைந்திருக்கும். ஆனால், அந்த பார்டனர்ஷிப்கள் உடைகிற சமயத்தில் கொத்து கொத்தாக விக்கெட்டுகளை இழந்து சொதப்பியிருப்பார்கள். அந்தக் காரியத்தை இந்த போட்டியில் ஆஃப்கன் செய்யவில்லை. விக்கெட்டுகள் விழுந்த சமயத்திலும் அழுத்தம் ஏற்றிக் கொள்ளாமல் அப்படியே சலனமின்றி மீண்டும் பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்து ஆடினர். ஒரு பக்கத்தில் இப்ராஹிம் சத்ரானும் முழுமையாக நின்று பக்குவமாக ஆடினார். நடப்பு உலகக்கோப்பையில் முழுமையாக 50 ஓவர்களுக்கு பேட்டிங் ஆடிய வீரர்களை பெரிதாக பார்க்கவே முடியவில்லை. ஆனால், இப்ராஹிம் இன்று அதைச் செய்து காட்டினார். எல்லாரையுமே ரொம்பவே தீர்க்கமான கவனத்துடன் உன்னிப்பாக எதிர்த்து ஆடியிருந்தார்.
கடந்த சில போட்டிகளாக கலக்கி வரும் ஆடம் ஜம்பாவையே எந்த சிரமமுமின்றி நேர்த்தியாக எதிர்கொண்டார். சத்ரானின் ஆட்டத்தால் ஆஃப்கானிஸ்தான் மீது ஜம்பாவால் அழுத்தம் ஏற்றவே முடியவில்லை. இதனாலயே மிடில் ஓவர்களில் விக்கெட் எடுக்க முடியாமல் தடுமாறியது ஆஸ்திரேலியா. சத்ரானும் ரஹ்மத் ஷாவும் 83 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சத்ரானும் ஷாகிதியும் 52 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த இரண்டு பார்ட்னர்ஷிப்களுமே ஆஃப்கானிஸ்தானை ஏறக்குறைய 40 ஓவர்கள் வரைக்கும் கரை சேர்த்துவிட்டது. இதன்பிறகு,சத்ரான் சதத்தை நெருங்க இன்னொரு முனையில் வந்தவர்கள் வேக வேகமாக ரன்களை சேர்த்தனர்.

அஷ்மத்துல்லாவும் நபியும் சில பவுண்டரி சிக்சர்களை அடித்து அவுட் ஆக, கடைசிக்கட்டத்தில் ரஷீத் கான் ஒரு அதிரடியான கேமியோவை ஆடிவிட்டு சென்றார். பவுண்டரிக்கு மட்டுமே குறிவைத்து ஆடிய ரஷீத் கான் 190+ ஸ்ட்ரைக் ரேட்டில் 35 ரன்களை அடித்திருந்தார். ஸ்டார்க் வீசிய கடைசி ஓவரில் மட்டும் இரண்டு சிக்சர்கள், ஒரு பவுண்டரியுடன் 16 ரன்களைச் சேர்த்து கொடுத்தார். சத்ரான் 143 பந்துகளில் 129 ரன்களை அடித்து கடைசி வரை நாட் அவுட்டாக இருந்தார். உலகக்கோப்பையில் ஆஃப்கானிஸ்தான் சார்பில் ஒரு வீரர் அடிக்கும் முதல் சதம் இதுதான். ஆஃப்கானிஸ்தான் அணி 291 ரன்களை எட்டியதற்கு முழு முதற் காரணம் சத்ரான்தான்.
மும்பையின் வான்கடே மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமான மைதானம் என்பதால் இந்த ஸ்கோர் நல்ல ஃபார்மில் இருக்கும் ஆஸ்திரேலியாவிற்கு போதுமா எனும் கேள்வி எழுந்தது. நடப்பு உலகக்கோப்பையில் வான்கடேவில் சேஸ் செய்த அணிகள் முதல் 10 ஓவர்களில் குறைந்தபட்சமாக 3 விக்கெட்டுகளையாவது இழந்திருக்கின்றனர்.
அதிகபட்சமாக இலங்கை அணி இந்தியாவிற்கு எதிராக முதல் 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்திருந்தனர். இதே ட்ரெண்ட் இந்த போட்டியிலும் தொடர்ந்திருந்தது. ஆஸ்திரேலிய அணி முதல் 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்திருந்தனர். ஃபரூக்கிக்கு பதிலாக அணிக்குள் வந்திருந்த நவீன் உல் ஹக் ஹெட் மற்றும் மிட்செல் மார்ஷ் இருவரின் விக்கெட்டையும் வீழ்த்தி கொடுத்திருந்தார். ஹெட் எட்ஜ் ஆகி கீப்பரிடம் கேட்ச் ஆகியிருந்தார். வேக வேகமாக பவுண்டரிகள் அடித்து அச்சுறுத்திய மார்ஷை மணிக்கட்டை கூடுதலாக இடப்பக்கம் வளைத்து ஒரு இன்கம்மிங் டெலிவரியை வீசி lbw ஆக்கினார் நவீன் உல் ஹக். இதற்கு மார்ஷ் ரிவியூ கூட எடுக்கவில்லை.

அந்தளவுக்கு க்ளியரான அவுட்டாக இருந்தது. ரன்ரேட்டை ஏறக்குறைய 6 க்கு நெருக்கமாக மெயிண்டெயின் செய்து ஆடிய ஆஸ்திரேலியாவுக்கு இடியாய் அமைந்தது அந்த 9 வது ஓவர். ஒமர்சாய் வீசிய அந்த ஓவரின் அடுத்தடுத்த பந்தில் வார்னர் மற்றும் இங்லீஸை வீழ்த்தி அசத்தினார். ஆட்டம் அப்படியே ஆஃப்கானிஸ்தான் பக்கம் மாற தொடங்கியது. ஆஸ்திரேலிய வீரர்களின் உடல் மொழியிலேயே ஒரு பதற்றத்தை பார்க்க முடிந்தது. பௌலிங்கிற்கு ஏற்ப ஆஃப்கனின் ஃபீல்டிங்கும் வசீகரமாக இருந்தது. லபுஷேனை டைரக்ட் ஹிட்டில் ரன் அவுட் ஆக்கினர்.ஸ்டாய்னிஸை ரஷீத்கான் lbw ஆக்கினர்.
91-7 என்ற நிலையில் இருந்தது ஆஃப்கானிஸ்தான். ஆஃப்கன் வெற்றி உறுதி என நினைத்துக் கொண்டிருந்த தருவாயில் மேக்ஸ்வெல் ஒற்றை ஆளாக ஒரு அசாத்திய இன்னிங்ஸை ஆடத் தொடங்கினார். ஒரு முனையில் கேப்டன் பேட் கம்மின்ஸை நிற்க வைத்துவிட்டு ஆஃப்கன் பௌலர்கள் அத்தனை பேரையும் சுழன்றடித்தார் மேக்ஸ்வெல். ஸ்பின்னர், வேகப்பந்து வீச்சாளர் என எந்த வேறுபாடும் இல்லாமல் சுழன்றடித்தார். விக்கெட் விடாமல் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து மேக்ஸ்வெல்லுக்கு கொடுப்பதுதான் கம்மின்ஸின் வேலையாக இருந்தது.
ஒற்றை ஆளாக நின்று மெது மெதுவாக இலக்கை நோக்கி முன்னேறி உத்வேகமிக்க இன்னிங்ஸை ஆடினார் மேக்ஸ்வெல். ஒரு கட்டத்தில் அவரால் நகரக்கூட முடியவில்லை. அந்தளவுக்கு ஓடி ஓடி ரன்கள் சேர்த்து பெரிய ஷாட்கள் ஆடி களைப்படைந்து போயிருந்தார் மேக்ஸ்வெல். மைதானத்திலேயே சுருண்டும் விழுந்தார்.

அவரை ரிட்டையர் ஹர்ட் ஆக சொல்லி அடுத்ததாக ஜம்பாவை இறக்கவெல்லாம் ஆஸி முயன்றது. ஆனால், அப்போதும் மேக்ஸ்வெல் தளரவில்லை. உடலளவில் கடும் சோர்வாக இருந்தாலும் போராடி வெல்வதற்கான மனவலிமை மேக்ஸ்வெல்லிடம் இருந்தது. நடக்கவே முடியாத சூழலில் நின்று ஆடி 201 ரன்களை எடுத்து ஒற்றை ஆளாக அணியை வெற்றிபெற வைத்தார் மேக்ஸ்வெல்.

‘Unbelievable…..Unimaginable… Remarkable’ மேக்ஸ்வெல் ஆடும்போது இந்த வார்த்தைகளையெல்லாம் கமென்ட்ரியில் அடிக்கடி கேட்க முடிந்தது. அசாத்தியம் என்கிற பொருளை குறிக்கும் எந்த வார்த்தைக்கும் மேக்ஸ்வெல்லின் இந்த இன்னிங்ஸை உதாரணமாக சொல்லலாம்.
ஆஸ்திரேலியாவின் மற்ற வீரர்களை வீழ்த்த முடிந்த ஆஃப்கானிஸ்தானால் மேக்ஸ்வெல்லிற்கு முன்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. என்னனென்னவோ செய்து போராடி பார்த்தார்கள். ஒன்றுமே பலனளிக்கவில்லை. நன்றாக ஆடியும் மேக்ஸ்வெல்லின் அசுரத்தனமான இன்னிங்ஸ் முன்பு நிராயுதபானியாக நின்று தோற்றனர். நடப்பு உலகக்கோப்பையின் மிகச்சிறந்த ஆட்டங்களுள் ஒன்றாக இந்த ஆட்டம் மாறியிருக்கிறது. இந்த ஆட்டத்தில் உங்களை கவர்ந்த தருணங்களை கமென்ட் செய்யுங்கள்