நொய்டா:விஸ்வகர்மா திட்டத்தின் கீழ், இந்த நிதியாண்டில் ஆறு லட்சம் பாரம்பரிய கைவினைஞர்களுக்கு பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சக செயலர் அதுல்குமார் திவாரி கூறினார்.
புதுடில்லி அருகே நொய்டாவில் உள்ள தேசிய தொழில் முனைவோர் மற்றும் சிறு வணிக மேம்பாட்டு நிறுவனத்தில் ஐந்து நாட்கள் நடந்த விஸ்வகர்மா -முதுநிலை பயிற்சியாளர்கள் மற்றும் மதிப்பீட்டாளர்களின் பயிற்சி திட்டத்தை துவக்கி வைத்த அதுல்குமார் திவாரி பேசியதாவது:
கைவினைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி செப்., 17ல் துவக்கி வைத்தார். இந்த திட்டத்துக்கு ஏற்கனவே 11 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பயனாளிகளை தேர்வு செய்வதற்காக கிராம பஞ்சாயத்து, மாவட்ட, மாநில அளவில் என மூன்று கட்ட செயல்முறைகள் நடக்கின்றன. குறிப்பிட்ட இலக்கை எட்டுவதில் மத்திய அரசு நம்பிக்கை கொண்டுள்ளது.
கைவினைஞர்களுக்கு நிபுணத்துவம் வாய்ந்த பயிற்சிகளை வழங்கி அவர்களின் வருவாயை மேம்படுத்த, அவர்களுக்கு 15,000 ரூபாய் மதிப்புள்ள கருவி தொகுப்புகள் வழங்கப்படும்.
பாரம்பரிய கைவினை தொழில்களான தச்சு, கொத்து, நகை, பொம்மை செய்தல் மற்றும் மீன்பிடி வலை தயாரித்தல் போன்ற தொழிலாளர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி மற்றும் சலுகைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த திட்டத்தில், 30 பேர் கொண்ட முதுநிலை பயிற்சியாளர்கள் வாயிலாக பயிற்சி அளிக்கப்படும். விண்ணப்பதாரர்களுக்கு மூன்று நிலை தேர்வு மற்றும் சரிபார்ப்பு செயல்முறையில், முதலில் கிராம விண்ணப்பதாரர்கள் கிராம அளவில் உள்ள ஜன் சேவா கேந்திரா வாயிலாக பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சக செயலி அல்லது இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement