ஸ்மார்ட்வாட்ச்சுகள் பல சந்தர்ப்பங்களில் உயிர் மீட்பராக செயல்பட்டுள்ளன. இதயத் துடிப்பு, இசிஜியை அளவிடும் ஸ்மார்ட்வாட்ச், அதனைப் பயன்படுத்துவோரின் ஆரோக்கியத்தில் உள்ள பிரச்னைகளை அறிந்து உயிர்களைக் காப்பாற்றிய பல சம்பவங்கள் உள்ளன.
இங்கிலாந்தில் உள்ள 42 வயது நபர் பால் வாப்ஹம் (Paul Wapham), ஹாக்கி வேல்ஸின் சிஇஓ- ஆகப் பணிபுரிந்து வருகிறார். ஸ்வான்சீயின் மோரிஸ்டன் பகுதியில் உள்ள இவரது வீட்டில் இருந்து காலை ரன்னிங் பயிற்சி செய்கையில், இவருக்கு மார்பில் கடுமையான வலி உண்டாகி உள்ளது.

என்ன செய்வதென்று தெரியாத நிலையில் ஸ்மார்ட்வாட்ச் மூலம் தன் மனைவியைத் தொடர்பு கொண்டுள்ளார். உடனடியாக அங்கு வந்த அவரின் மனைவி மருத்துமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
அங்கு அவருக்கு தமனியில் ஏற்பட்ட அடைப்பின் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டதை மருத்துவர்கள் அறிந்தனர். தமனியில் உள்ள அடைப்பை அகற்றுவதற்கான சிகிச்சைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டன.
இது குறித்து அவர் கூறுகையில், “நான் வழக்கம் போல காலை 7 மணிக்கு ரன்னிங் சென்றேன், ரன்னிங் சென்ற ஐந்து நிமிடங்களிலேயே எனக்கு மார்பில் பெரும் வலி ஏற்பட்டது. எனது மார்பு இறுக்கமாக இருந்தது. சாலையில் கைகள் மற்றும் முழங்கால்களை ஊன்றியபடி சரிந்தேன். இறுக்கமாக இருந்த வலி பின்னர் பிழிவதைப் போல மாறியது.

என் மனைவி லாராவுக்கு போன் செய்ய என் கைக்கடிகாரத்தைப் பயன்படுத்தினேன். அதிர்ஷ்டவசமாக, நான் வீட்டில் இருந்து ஐந்து நிமிட தூரத்தில் இருந்தேன். அதனால் அவள் ஓடி வந்து என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள். மருத்துவர்கள் விரைவாகச் செயல்பட்டனர்.
நான் அதிக எடை கொண்டவன் அல்ல, என்னைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள முயல்பவன், அதனால் எனக்கு ஆபத்து காரணிகள் எதுவும் இல்லை என்றே நம்பினேன். எனக்கு மாரடைப்பு ஏற்பட்டது சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இது என் குடும்பத்தினர் உட்பட அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
அந்த நேரத்தில் ஸ்மார்ட்வாட்ச் பெரிதும் உதவியாக இருந்தது’’ என்று தெரிவித்துள்ளார்.
நீங்கள் ஸ்மார்ட்வாட்ச் பயன்படுத்துபவரா?! உங்களுக்கு எந்த வகையில் ஸ்மார்ட்வாட்ச் உதவியாக உள்ளது. கமென்ட்டில் சொல்லுங்கள்!…