“ஒளியை மங்கவைத்த ஏழ்மை” – அயோத்தி தீபோற்சவ மறுபக்கத்தை பகிர்ந்த அகிலேஷ்

அயோத்தி: உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் 22.23 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்ட ‘கின்னஸ் சாதனை’ தீபோற்சவ நிகழ்வுக்குப் பின் விளக்கில் மீதமிருக்கும் எண்ணெயை ஏழைக் குழந்தைகள் சேகரிக்கும் வீடியோவை பகிர்ந்துள்ள அம்மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், ‘தெய்வீகத்துக்கு மத்தியில் ஏழ்மை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவரின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், விளக்குகளில் மீதமிருக்கும் எண்ணெயை ஏழைக் குழந்தைகள் சேகரிக்கின்றனர். அப்போது காவலர்கள் அவர்களை விரட்டும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவை பகிர்ந்து, “தெய்வீகத்துக்கு மத்தியில் ஏழ்மை. ஏழ்மை ஒருவரை எரிந்த விளக்குகளில் இருந்து எண்ணெய் சுமக்க வைக்கும் நிலையில் இருக்கும்போது, கொண்டாட்டத்தின் ஒளி என்பது மங்கிவிடும். எங்களின் ஒரே விருப்பம் இதுபோன்ற ஒரு திருவிழா வர வேண்டும். ஆனால் அதில் கிடைக்கும் வெளிச்சத்தால் இதுபோன்ற இடங்கள் மட்டுமல்ல, ஏழையின் வீடும் ஒளிர வேண்டும்” என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

இதேபோல் மற்றொரு பதிவில், ஒரு பெண் விளக்கில் இருந்து எண்ணெயை சேகரிக்கும்போது காவலர் ஒருவர் அவரை மிரட்டுவதும், அப்போது அப்பெண் கையெடுத்து கும்பிடும் காட்சிகளை பகிர்ந்துள்ள அகிலேஷ் யாதவ், “அப்பெண் உதவியற்றவர் என்பதால் கைகளை கூப்பி அனுமதி கேட்கிறார். ஏழைகளின் திருவிழா எப்போது?” எனப் பதிவிட்டுள்ளார். இப்பதிவுகள் கவனம் ஈர்த்துவருகின்றன.

— Akhilesh Yadav (@yadavakhilesh) November 11, 2023

கின்னஸ் சாதனையில் தீபோற்சவ நிகழ்வு: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி நகரில் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் 22.23 லட்சம் விளக்குகள் தீபோற்சவ நிகழ்வை முன்னிட்டு ஒளிர்விக்கப்பட்டது. இது கின்னஸ் உலக சாதனையாகவும் அமைந்தது. 14 ஆண்டுகால வனவாசத்தை முடித்துக் கொண்டு ராமர், சீதை மற்றும் லட்சுமணன் அயோத்தி திரும்பியதாக சொல்லப்படும் வழக்கத்தின் காரணமாக அயோத்தியில் தீபோற்சவ விழா நடைபெறுகிறது. இந்த ஆண்டு வழக்கம் போலவே தீபோற்சவம் நடைபெற்றது. கடந்த ஆண்டு நடைபெற்ற அயோத்தி தீபோற்சவ விழாவில் 15.76 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டன. இது கின்னஸ் சாதனையாக அமைந்தது. நடப்பு ஆண்டுக்கான தீபோற்சவ விழா அதை தகர்த்துள்ளது.

கடந்த 2017 முதல் அயோத்தி நகரில் தீபோற்சவ விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு அமைந்தது இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. 2017-ல் 51 ஆயிரம் விளக்குகளுடன் இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. 2019-ல் 4.10 லட்சம், 2020-ல் 6 லட்சம், 2021-ல் 9 லட்சம் என இந்த எண்ணிக்கை அதிகரித்தது. நடப்பு ஆண்டுக்கான தீபோற்சவ விழாவில் முதல்வர் யோகி ஆதித்யநாத், அந்த மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல், மாநில அமைச்சர்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 54 பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் சுமார் 22.23 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டதாக கின்னஸ் உலக சாதனை அமைப்பு அங்கீகரித்து, சான்றிதழும் வழங்கியது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.