கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் 18-ம் தேதி கொலைசெய்யப்பட்டார். கனடாவில் சர்ரே நகரிலுள்ள குருநானக் சீக்கிய குருத்வாராவில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் அந்த கொலை நிகழ்ந்தது. முகமூடி அணிந்த நபர்கள் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை சுட்டுக் கொன்றனர்.

மர்மம் நிறைந்த அந்தக் கொலை விவகாரம், கனடாவில் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் பெரிதாக எதிரொலித்தது. டொரன்டோ, லண்டன், மெல்போர்ன், சான்ஃபிரான்சிஸ்கோ உள்ளிட்ட இடங்களில் இந்திய அரசுக்கு எதிராக சீக்கியப் பிரிவினைவாதிகள் போராட்டம் நடத்தினர்.
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா குற்றம் சாட்டியது. அதைத் தொடர்ந்து, கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்திய தூதரக அதிகாரிகளை கனடாவும், கனடா தூதரக அதிகாரிகளை இந்தியாவும் வெளியேற்றியதால், இரு நாட்டு உறவில் பதற்றம் ஏற்பட்டது. கனடாவில் வாழும் இந்தியர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு எச்சரிக்கை வெளியிட்டது. இரு நாடுகளும் பரஸ்பரம் விசா வழங்குவதை நிறுத்தின.

கனடா நாட்டின் தேசிய பாதுகாப்புத்துறை அமைச்சரான பில் பிளேய்ர், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘இந்தியாவுடனான கனடாவின் உறவு முக்கியமானது. கனடா, இந்தியாவுடனான கூட்டாண்மையைத் தொடரும். அதே நேரத்தில், இந்தியாவுக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை தொடரும். கனடாவின் இந்த நடவடிக்கையால், இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையேயான உறவு சவாலான ஒன்றாகவே இருக்கும். சட்டத்தைப் பாதுகாப்பதும், எங்கள் குடிமக்களைப் பாதுகாப்பதும், ஒரு முழுமையான விசாரணையை நடத்தி உண்மையைக் கண்டறிவதற்கான பொறுப்பும் எங்களுக்கு இருக்கிறது’ என்றார்.
இந்த விவகாரத்தால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு தொடர்ந்து மோசமடைந்தது. இந்த நிலையில், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடர்பு இருக்கிறது என்ற குற்றச்சாட்டை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தற்போது மீண்டும் எழுப்பியிருக்கிறார்.

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ, “இந்த விவகாரத்தை நாங்கள் மிகவும் சீரியஸாக எடுத்துக்கொண்டிருக்கிறோம். இது தொடர்பாக சட்ட அமைப்புகளும் புலனாய்வு அமைப்புகளும் தொடர்ந்து பணியாற்றிவருகின்றன. எப்போதும், சட்டத்தின் பக்கம் நிற்கக்கூடிய தேசமாக கனடா விளங்கிவருகிறது.
சர்வதேச சட்டங்களை பெரிய நாடுகள் மீறுகின்றன என்றால், ஒட்டுமொத்த உலகமும் எல்லோருக்கும் மிகவும் ஆபத்தான ஒன்றாக மாறிவிடும். கனடா நாட்டின் குடியுரிமை பெற்ற ஒருவர் கனடா மண்ணில் கொலை செய்யப்பட்டதில், இந்திய அரசின் அமைப்புகளுக்குத் தொடர்பு இருப்பதாக நாங்கள் நம்புவதற்கு காரணங்கள் இருக்கின்றன. இரு நாடுகளிடையே ராஜாங்க ரீதியிலான உறவில் சிக்கல் ஏற்பட்டிருக்கும் நிலையில், கனடா தூதர அதிகாரிகள் 40-க்கும் மேற்பட்டோரை இந்தியாவிலிருந்து வெளியேற்றியது வியன்னா உடன்படிக்கையை மீறும் செயலாகும்’ என்றார் ட்ரூடோ.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருக்கிறது என்ற கனடா பிரதமர் ட்ரூடோவின் குற்றச்சாட்டை இந்தியா மறுத்திருக்கிறது. இதுபோல இந்தியா ஒருபோதும் செயல்படாது என்றும் இந்தியா உறுதியாகத் தெரிவித்தது. கனடாவில் இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளின் செயல்பாடுகள் தொடர்கின்றன என்று ஏற்கெனவே இந்தியா கவலை தெரிவித்தது.
கனடாவில் அதிகரித்து வரும் காலிஸ்தான் தீவிரவாதிகளின் செயல்பாடுகள் பற்றிய இந்தியாவின் கவலை குறித்து ட்ரூடோவிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘அமைதியான போராட்டத்தின் சுதந்திரத்தை கனடா எப்போதும் பாதுகாக்கும். அதே நேரத்தில், வன்முறையை கனடா தடுக்கும்’ என்றார் அவர்.

நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருக்கிறது என்று தனது நிலைப்பாட்டில் கனடா தொடர்ந்து உறுதியாக இருப்பதைப் போல, இந்தியாவுக்கு எதிரான இத்தகைய குற்றச்சாட்டை ஏற்க முடியாது என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருக்கிறது. இதனால், இரு நாடுகளிடையேயான உறவில் சுமூக நிலை ஏற்படுத்துவதற்கான சூழல் இப்போதைக்கு இல்லை என்பது தெரிகிறது.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.