ஓடுதளத்தில் தெருநாய்… பதறிய விமானி; தரையிறங்காமல் புறப்பட்ட இடத்துக்கே திரும்பிய பயணிகள் விமானம்!

கோவா விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானமானது, அங்கு அலைந்துகொண்டிருந்த தெருநாயால் தரையிறங்காமல், புறப்பட்ட இடத்துக்கே திரும்பிச் சென்ற சம்பவம், பெரும் பேசுபொருளாகியிருக்கிறது. அதாவது, விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் UK881 என்ற விமானம், நேற்று மதியம் 12:55 மணியளவில், பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திலிருந்து, கோவாவிலுள்ள டபோலிம் விமான நிலையம் நோக்கி புறப்பட்டது.

தெருநாய்

ஆனால், கோவா விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் வேளையில், விமானத்தின் ஓடுபாதையில் தெருநாய் ஒன்று அலைந்துகொண்டிருப்பதைக் கண்ட விமானி, விமானத்தை மீண்டும் பெங்களூரு விமான நிலையத்துக்கே திருப்பினார்.

அதைத் தொடர்ந்து, விமான சேவையின் அடுத்தடுத்த நகர்வுகளை தனது ட்விட்டர் எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுக்கொண்டிருந்த விஸ்தாரா ஏர்லைன்ஸ், “கோவா விமான நிலையத்தின் ஓடுபாதையில் ஏற்பட்ட தடை காரணமாக, பெங்களூருவிலிருந்து கோவாவுக்கு வந்த UK881 விமானம், பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டிருக்கிறது. மாலை 03:05 மணியளவில் விமானம் பெங்களூருக்கு வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று முதலில் பதிவிட்டது. அடுத்த இரண்டு மணிநேரம் கழித்து, “பெங்களூருவுக்குத் திருப்பிவிடப்பட்ட UK881 விமானம், பெங்களூரிலிருந்து மாலை 04:55 மணியளவில் புறப்பட்டு, மாலை 06:15 மணியளவில் கோவா வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று விஸ்தாரா ஏர்லைன்ஸ் தெரிவித்தது. அதன்படியே, பெங்களூரு விமானம் மாலை 06:15 மணியளவில் கோவாவுக்கு வந்தடைந்தது.

விஸ்தாரா விமானம்

இது குறித்து ஊடகத்திடம் பேசிய கோவா விமான நிலைய இயக்குநர் எஸ்.வி.டி.தனம்ஜெய ராவ், “டபோலிம் விமான நிலையத்தின் ஓடுபாதையில் தெருநாய் காணப்பட்டதால், விமானியிடம் சிறிது நேரம் தாக்குப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், விமானத்தை அவர் பெங்களூருவுக்கே திருப்ப விரும்பினார். விமான ஓடுபாதையில் எப்போதாவது தெருநாய் நுழையும் சம்பவங்கள் நடக்கின்றன. ஆனால், அங்கிருக்கும் ஊழியர்களால் உடனடியாக அந்தப் பகுதி சரிசெய்யப்பட்டுவிடும். இருப்பினும், என்னுடைய இந்த ஒன்றரை ஆண்டுக்கால பதவிக்காலத்தில் இவ்வாறு நடப்பது இதுவே முதன்முறை” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.