ராகுல் காந்தி, சோனியா காந்தி போன்ற காங்கிரஸின் இன்றைய தலைவர்களை விட, பா.ஜ.க தான் நேரு என்ற பெயரை அதிகம் பயன்படுத்துகிறது எனலாம். “பாகிஸ்தான் பிரிந்து போனதற்குக் காரணம் நேருதான், சீனாவுடனான வெளியுறவுக்கொள்கையின் நேருவின் நிலைப்பாடு சரியில்லை, வடகிழக்கு மாநிலங்களை நேரு கண்டுகொள்ளாமல் விட்டதால்தான் இப்போது மணிப்பூரில் கலவரம் வெடித்திருக்கிறது” என நேரு குறித்த விமர்சனங்களை பா.ஜ.க வைக்காத நாளே இல்லை.

“பா.ஜ.க அரசால் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்ட எல்.ஐ.சி, ஏர் இந்தியாவை அரசுடைமையாக்கியவர் நேரு, விஞ்ஞானிகளின் சாதனைகளை தங்கள் கட்சிக்கணக்கில் பா.ஜ.க எழுதிக்கொண்டிருக்கிறதே, அந்த இஸ்ரோவை உருவாக்கியவர் நேரு, அரசியலமைப்புச் சட்டம், தேர்தல் ஆணையத்தை உருவாக்கியவர் நேரு, ஐந்தாண்டு திட்டங்களை வடிவமைத்துச் செயல்படுத்தியவர் நேரு, ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களை உருவாக்கியவர் நேரு, நாட்டின் முதல் எய்ம்ஸ் மருத்துவமனையை நிறுவியர் நேரு” என்று காங்கிரஸும் பா.ஜ.க-வின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறது.
நேருவுக்குப் பிறகு லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், சரண் சிங், ராஜீவ் காந்தி என எத்தனையோ பிரதமர் வந்திருந்தாலும் பா.ஜ.க-வால் அதிகம் குறிவைக்கப்படும் பிரதமர்கள் வரிசையில் நேருதான் இப்போதும் முதலிடத்தில் இருக்கிறார். இது ஏன் என்று பா.ஜ.க மாநில செயலாளர் அஸ்வத்தாமனிடம் பேசினோம்.
“ஐ.நா சபையில் நிரந்தர உறுப்பினராக நாம் இப்போது போராடிக் கொண்டிருக்கிறோம், ஆனால் அப்போது வாய்ப்பு தேடிவந்தபோது அதை நிராகரித்தவர் நேரு. திபெத்தை கட்டுக்குள் கொண்டுவர சீனா முயன்றபோது இந்தியாவிடம் உதவி கேட்டனர். அப்போது நேரு உதவி செய்ய மறுத்ததால் சீனாவுடன் எல்லையை பகிர்ந்துகொள்ள வேண்டிய நிலைமை நமக்கு ஏற்பட்டது. அப்போது திபெத்தை காப்பாற்றியிருந்தால் இந்தியாவுடன் திபெத்-தான் எல்லையைப் பகிர்ந்திருக்கும்.

இப்படி நேரு செய்த வரலாற்றுத் துரோகங்கள் எப்படி நினைவுக்கு வராமல் இருக்கும்? கட்டமைப்பு வளர்ச்சிகளை ஏற்படுத்தியவர் நேரு… நேரு… என்று காங்கிரஸ் சொல்கிறது. ஆனால் இந்திய தேசத்தை மிகப்பெரிய ஒருங்கிணைப்போடு கட்டமைத்தவர் சர்தார் வல்லபாய் படேல், பொதுத்துறை நிறுவனங்கள், தொழிற்சாலைகள் குறித்த பொருளாதார கொள்கைகளை வகுத்தவர் ஷியாம பிரசாத் முகர்ஜி, பொருளாதார ரீதியிலான தொலைநோக்குப் பார்வையை கொடுத்தவர் அண்ணல் அம்பேத்கர். ஆனால் இவர்கள் எல்லோருடைய பெருமையையும் மூடி மறைத்துவிட்டு, நேருதான் செய்தார் என்று காங்கிரஸ் பேசலாம். நாங்களும் அப்படிப் பேச முடியாது.” என்கிறார்.
ஆனால் நேரு பின்பற்றிய மதச்சார்பின்மை கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாமல்தான் பா.ஜ.க அவரை கண்மூடித்தனமாக எதிர்க்கிறது என்கிறார் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் பொன் கிருஷ்ணமூர்த்தி. இதுகுறித்து நம்மிடம் பேசிய அவர், “இந்திய மக்கள் மனங்களில் இருந்து அகற்றவே முடியாத 2 தலைவர்கள் காந்தியும் நேருவும். இருவரும் தங்களுக்காக வாழாமல் இந்தியாவின் சுதந்திரத்துக்காகவும் நலனுக்காகவுமே வாழ்ந்தார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டுமென்பது மகாத்மா காந்தியின் விருப்பம். ஒரு மதத்தை பின்பற்றிக்கொண்டு மதச்சார்பற்ற ஆட்சியை கொடுக்க முடியாது என்பதால் தன்னை நாத்திகராகவே மாற்றிக்கொண்டவர் நேரு.

விடுதலைக்கு முன்பு இந்தியாவில் 85% பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருந்தார்கள், ஆனால் நேருவின் ஆட்சியின் முடிவில் 40% பேர்தான் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருந்தார்கள். குண்டூசி கூட தயாரிக்க முடியாமல் இருந்த இந்தியாவை அணுகுண்டு வரை தயாரிக்க வைக்கும் அளவுக்கு ஆட்சி செய்தவர் நேரு. நாட்டு மக்கள் எல்லோருடைய வளர்ச்சியிலும் பங்கு இருந்ததால்தான் நேருவை இன்னும் மக்கள் மறக்கவில்லை. நேரு என்ற பெயர் இருக்கும்வரை காங்கிரஸை அழிக்க முடியாது என்று பா.ஜ.க நினைக்கிறது. அதனால் நேருவை விமர்சித்து அவரை அழிக்க முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் அது ஒருபோதும் நடக்காது.” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.