தெலுங்கானா: அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ; 9 பேர் பலி

ஐதராபாத்,

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் நம்பள்ளி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், திடீரென அந்த குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடம் முழுவதும் கரும் புகை பரவியது.

இந்த சம்பவத்தில் பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. பலர் சுயநினைவை இழந்தனர். இதில், 2 குடும்பங்களை சேர்ந்த 9 பேர் உயிரிழந்து உள்ளனர். அவர்களில் 2 சிறுமிகள், 4 பெண்களும் அடங்குவர்.

மொத்தம் 21 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். முதல்கட்ட விசாரணையில், டிரம் ஒன்றில் வைத்திருந்த ரசாயன பொருட்கள் தீப்பிடித்து, கட்டிடத்தில் பரவியது என போலீசார் கூறுகின்றனர்.

இந்த துயர சம்பவத்திற்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் இரங்கல் தெரிவித்தனர். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்-மந்திரி அறிவித்து உள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.