பெர்ஃபெக்ட் இந்தியா, படுமோச பாகிஸ்தான், அமர்க்கள ஆப்கானிஸ்தான் – லீக் சுற்றின் ரிப்போர்ட் கார்டு!

நெதர்லாந்துக்கு எதிரான இந்தியாவின் அபார வெற்றியோடு 2023 உலகக் கோப்பையின் லீக் சுற்று முடிவுக்கு வந்துவிட்டது. அரையிறுதி போட்டிக்குப் பெரிய அளவிலான டிராமாக்கள் இல்லை என்றாலும், வழக்கத்தை விட சற்று அதிகமான அதிர்ச்சிகள் இந்தத் தொடரில் அரங்கேறின. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் எப்படிச் செயல்பட்டிருக்கின்றன? ஓர் அலசல் இங்கே!

1. இந்தியா

விளையாடிய 9 போட்டிகளையும் வென்று நூற்றுக்கு நூறு மார்க் வாங்கியிருக்கிறார்கள் ரோஹித்தின் பாய்ஸ். பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என அனைத்துமே அட்டகாசமாக இருக்கின்றன, இதுதான் இந்தியாவின் சிறந்த ஒருநாள் அணியா என்ற விவாதம் ஏற்கெனவே நடந்துகொண்டிருக்கிறது. இதுவரை இந்தியா சார்பில் இந்த உலகக் கோப்பையில் 5 சதங்களும் 15 அரைசதங்களும் அடிக்கப்பட்டிருக்கின்றன. கோலியும், ரோஹித்தும் 500 ரன்களுக்கும் மேல் அடித்து அசத்தியிருக்கிறார்கள். இந்தியாவின் பந்துவீச்சோ பேட்டிங்கை விட பல மடங்கு சிறப்பாக இருக்கிறது. இந்தியாவுக்கு எதிராக 250 ரன்களைக் கடக்கவே எதிரணிகள் தடுமாறிக்கொண்டிருக்கின்றன. பும்ரா, சிராஜ், ஷமி அடங்கிய வேகப்பந்துவீச்சு கூட்டணி 2003 ஆஸ்திரேலிய பௌலிங் யூனிட்டுக்கு நிகராகப் பேசப்படுகிறது. இதைவிட பெருமையாய் சொல்ல என்ன இருக்கிறது!

IND vs PAK – இந்தியா

பாசிட்டிவ்: எல்லாமேதான்

நெகட்டிவ்: ஹர்திக்கின் காயம்

டாப் பெர்ஃபாமர்: விராட் கோலி

ஏமாற்றம்: ஷெர்லோக் ஹோம்ஸ் கூட அதைத்தான் தேடிக்கொண்டிருக்கிறார்

2. தென்னாப்பிரிக்கா

பலமான பேட்டிங்கை வைத்தே அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது தென்னாப்பிரிக்க அணி. முதலில் பேட்டிங் செய்து, பெரிய ஸ்கோர் எடுத்து, அது கொடுக்கும் நெருக்கடியால் விக்கெட்டுகளை வீழ்த்துவதுதான் அவர்களின் கேம் பிளான். அது பெரும்பாலான போட்டிகளில் கைகொடுத்துவிட்டது. கேப்டன் டெம்பா பவுமா தவிர அனைத்து பேட்ஸ்மேன்களுமே பெரிய இன்னிங்ஸ்கள் ஆடி அணிக்குப் பங்களித்துவிட்டனர். அதிலும் டி காக்..! இந்திய ஆடுகளங்கள் என்றால் சின்ராசை கையிலேயே பிடிக்க முடிவதில்லை. இத்தனை ஆண்டுகளாய் அவர்களுக்குக் கிடைக்காமல் இருந்த அந்த உலகக் கோப்பையை இம்முறை வென்றுவிடுவது என்ற தீர்க்கமான திட்டத்தோடு அவர்கள் விளையாடுகிறார்கள். நெதர்லாந்துக்கு எதிரான அந்த அதிர்ச்சித் தோல்வியை மட்டும் தவிர்த்திருந்தால் அவர்களுக்கு இது இன்னும் சிறப்பான ஒரு லீக் சுற்றாக அமைந்திருக்கும்.

IND v SA

பாசிட்டிவ்: முதலில் பேட்டிங் செய்யும்போது புலியாக உறுமும் பேட்டிங் யூனிட்

நெகட்டிவ்: சேஸிங்கில் புலி பூனை ஆகிவிடுவது

டாப் பெர்ஃபாமர்: குவின்டன் டி காக்

ஏமாற்றம்: டெம்பா பவுமா

3. ஆஸ்திரேலியா

அடுத்தடுத்து இரு தோல்விகளோடு உலகக் கோப்பையைத் தொடங்கியபோது ஆஸ்திரேலிய அணி மீது நிறைய விமர்சனங்கள் இருந்தன. ஆனால் அதன்பிறகு தொடர்ச்சியாக 7 போட்டிகளை வென்று ஆஸ்திரேலியா யார் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். இருந்தாலும் கிட்டத்தட்ட தென்னாப்பிரிக்காவைப் போல் பேட்டிங்கின் பங்களிப்பினால்தான் அந்த அணியும் பெரும்பாலான வெற்றிகளைப் பதிவு செய்திருக்கிறது. வார்னர், மிட்செல் மார்ஷ், மேக்ஸ்வெல் போன்ற வீரர்களின் ஒருசில அட்டகாசமான செயல்பாடுகள் அவர்களைக் கரைசேர்த்திருக்கின்றன. பந்துவீச்சில் ஜாம்பா சிறப்பாகச் செயல்படுகிறார். ஹேசில்வுட் கொஞ்சம் நம்பிக்கையளிக்கிறார். ஆனால் மற்றவர்கள் தாக்கம் ஏற்படுத்தத் தவறுவது ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவாக அமைந்துவருகிறது.

Maxwell – AUS

பாசிட்டிவ்: பேட்டிங்கின்போது பழைய ஆஸ்திரேலிய அணியின் குணம் முக்கியமான கட்டங்களில் வெளியே எட்டிப்பார்க்கிறது

நெகட்டிவ்: பந்துவீச்சின்போது அந்த பழைய ஆஸ்திரேலியா பெரும்பாலும் மல்லாக்கப் படுத்துவிடுகிறது

டாப் பெர்ஃபாமர்: கிளென் மேக்ஸ்வெல்

ஏமாற்றம்: விக்கெட் கீப்பர்கள் இருவருமே

4. நியூசிலாந்து

இங்கிலாந்தின் சொதப்பல், இந்த உலகக் கோப்பைத் தொடரின் அட்டவணை, பாகிஸ்தானின் தடுமாற்றம்… இவையெல்லாம் சேர்ந்து மீண்டும் ஒருமுறை நியூசிலாந்தை அரையிறுதிக்கு அழைத்துவந்திருக்கிறது. பெரிய அணிகளிடம் சொதப்பினாலும், மற்ற அணிகளிடம் தங்கள் கைவரிசையைக் காட்டி மறுபடியும் நான்காவது இடத்தை இறுகப் பற்றிக்கொண்டது பிளாக் கேப்ஸ். ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல் தவிர அந்த அணியில் யாருமே சீராக விளையாடுவதில்லை. இருந்தாலும் கேப்டன் வில்லியம்சன் கம்பேக் கொடுத்திருப்பது அவர்களுக்கு அதிக நம்பிக்கை கொடுத்திருக்கிறது. அசத்தலாக தொடரைத் தொடங்கிய சான்ட்னர், தன் அணியைப் போலவே போகப் போக மங்கிவிட்டார். வேகப்பந்துவீச்சு ஒவ்வொரு போட்டியிலும் வேறு வேறு விதமாக இருக்கிறது. அது அவர்களுக்குச் சிக்கலாக அமையலாம்.

NZ v PAK

பாசிட்டிவ்: கேப்டன் வில்லியம்சன் நல்ல ஃபார்மில் இருக்கிறார். இந்தியாவுடன் மீண்டும் அரையிறுதியில் ஆடுவதையும் கூட சொல்லலாம்!

நெகட்டிவ்: வேகப்பந்துவீச்சு இன்னும் முழு வீச்சுடன் செயல்படத் தொடங்கவில்லை.

டாப் பெர்ஃபாமர்: ரச்சின் ரவீந்திரா

ஏமாற்றம்: டாம் லாதம்

5. பாகிஸ்தான்

நசீம் ஷா போன்ற ஒரு ஸ்டார் பிளேயரின் காயம், ஒருசில முக்கிய வீரர்கள் ஃபார்மை இழந்தது எல்லாம் சரியாக உலகக் கோப்பை நேரத்திலேயே நடந்தது பாகிஸ்தான் அணியைப் பெரிதும் பாதித்துவிட்டது. அனைத்தையும் விட, அணியைச் சிறப்பாக வழிநடத்தக்கூடிய சரியான கேப்டனாக பாபர் ஆசம் இருக்கவில்லை. அதனால் களத்தில் ஆட்டம் கையை விட்டுப் போகும்போது பாகிஸ்தானால் எதுவும் செய்ய இயலவில்லை. பேட்டிங்கிலும் ரிஸ்வானும் அவரும் ஷிஃப்ட் முறையில்தான் நன்றாக ஆடினார்கள். தனிப்பட்ட முறையிலும் கூட இந்தத் தொடர் எந்த வீரருக்கும் சிறப்பாக அமைந்துவிடவில்லை. இதற்கு இடையே தேர்வுக் குழுத் தலைவர் இன்சமாம் பதவி விலகி பாகிஸ்தானின் வழக்கமான டிராமாவை நிறைவு செய்து வைத்தார்.

NZ v PAK

பாசிட்டிவ்: இளம் ஓப்பனர் அப்துல்லா ஷஃபீக்கின் ஓரளவு சிறப்பான செயல்பாடு

நெகட்டிவ்: இன்னும் ஒரு அணியாக பாகிஸ்தான் செயல்படுவதைப் பார்க்க முடிவதில்லை

டாப் பெர்ஃபாமர்: அப்துல்லா ஷஃபீக்

ஏமாற்றம்: இமாம் உல் ஹக், ஷதாப் கான், ஹாரிஸ் ராஃப் மற்றும் பலர்

6. ஆப்கானிஸ்தான்

அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டதாக ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் வருந்தலாம், அந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான செயல்பாட்டுக்காக அவர்களை சிலர் விமர்சிக்கலாம். இருந்தாலும் ஆப்கானிஸ்தான் அணிக்கு இது அட்டகாசமான தொடராக அமைந்திருக்கிறது. இந்தியா, தென்னாப்பிரிக்காவுக்கு அடுத்து லீக் சுற்றில் மூன்றாவது சிறந்த அணி என்றே ஆப்கானிஸ்தானை சொல்லலாம். இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை உட்பட 3 முன்னாள் சாம்பியன்களை ஒரே தொடரில் வீழ்த்தியிருப்பது அந்த அணி அடுத்த கட்டத்துக்கு முன்னேறியிருப்பதை உணர்த்தியிருக்கிறது. தொடர்ந்து 3 போட்டிகளை சேஸ் செய்து வென்றிருப்பதும் அந்த அணி பெருமைப்பட்டுக்கொள்ள இன்னொரு காரணம். ஒருவேளை வங்கதேசத்துக்கு எதிரான அந்த முதல் போட்டியில் வென்றிருந்தால் அவர்களின் உலகக் கோப்பைப் பயணம் இன்னும் வேறு மாதிரி இருந்திருக்கும். ஏற்கெனவே அதுதான் இந்த உலகக் கோப்பையின் பெரிய அப்செட் என்று பலரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்!

PAK v AFG

பாசிட்டிவ்: ஸ்பின்னர்களின் அணி என்றே அடையாளப்படுத்தப்பட்டவர்கள், சேஸ் செய்து 3 போட்டிகளை வென்றிருப்பது.

நெகட்டிவ்: வங்கதேசத்துக்கு எதிரான தோல்வி

டாப் பெர்ஃபாமர்: அஸ்மத்துல்லா ஓமர்சாய்

ஏமாற்றம்: முகமது நபியின் பேட்டிங்

7. இங்கிலாந்து

ஒரு நடப்பு சாம்பியனுக்கு உலகக் கோப்பை தொடர் இவ்வளவு மோசமாக இருந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆப்கானிஸ்தான், இலங்கை என ரேங்கிங்கில் கீழே இருக்கும் அணிகளிடமெல்லாம் அடி வாங்கி தொடரிலிருந்து வெளியேறியிருக்கிறது இங்கிலாந்து. வீரர்களுக்குத் தாகம் இல்லை, அணித் தேர்வு, பட்லரின் கேப்டன்சி, அணியின் அணுகுமுறை, நம்பிக்கையின்மை என இங்கிலாந்தின் சொதப்பலுக்கு 2023 காரணங்கள் சொல்லலாம். ஆனால் இனி எதுவும் உதவப்போவதில்லை. மோர்கனின் தலைமையில் எழுச்சி கண்டதுபோல் இன்னொரு முறை அந்த அணியின் கிரிக்கெட் முன்னேற்றம் காணுமா என்பது சந்தேகம்தான். உலகக் கோப்பை செயல்பாட்டுக்கு மார்க் போட்டால், 10 அணிகளில் கடைசி இடம் இங்கிலாந்துக்காகத்தான் இருக்கும்.

England

பாசிட்டிவ்: இங்கிலாந்தின் அரசும், பிரீமியர் லீக் கால்பந்து நடுவர்களும் இவர்களுக்கு இணையாக விமர்சனங்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள்

நெகட்டிவ்: பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங், கேப்டன்சி என அனைத்துமே சொதப்பியிருக்கிறது.

டாப் பெர்ஃபாமர்: பென் ஸ்டோக்ஸ்

ஏமாற்றம்: ஜாஸ் பட்லர்

8. வங்கதேசம்

2019 உலகக் கோப்பை பெரிய நம்பிக்கை கொடுத்தது. இந்திய துணைக் கண்டத்தில் இத்தொடர் நடந்ததால் அதைவிட சிறப்பான செயல்பாட்டை ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஒட்டுமொத்தமாக ஏமாற்றியிருக்கிறது வங்கதேச அணி. தொடருக்கு முன்பே தமீம் இக்பாலால் தொடங்கிய டிராமாவிலிருந்து அந்த அணி மீண்டு பாசிட்டிவான மனநிலைக்கு வரவே இல்லை. ஷகிப் அல் ஹசன், மெஹதி ஹசன் மிராஜ் போன்ற ஸ்டார் ஆல் ரவுண்டர்களும் அவர்களிடம் எதிர்பார்த்ததை முழுமையாகக் கொடுக்கவில்லை. ஆப்கானிஸ்தானை வீழ்த்தியதும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மஹமதுல்லாவின் இன்னிங்ஸும்தான் இந்த உலகக் கோப்பையில் அவர்கள் சந்தோஷப்பட்டுக்கொள்ளக்கூடிய இரு விஷயங்கள்.

Bangladesh

பாசிட்டிவ்: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான வெற்றி

நெகட்டிவ்: கிரிக்கெட் சிகரத்தில் மெல்ல ஏறிக்கொண்டிருந்தவர்கள் பெரும் சறுக்கலைச் சந்தித்திருக்கிறார்கள்

டாப் பெர்ஃபாமர்: மஹமதுல்லா

ஏமாற்றம்: முஸ்தாஃபிசுர் ரஹ்மான்

9. இலங்கை

இந்த உலகக் கோப்பை தொடரால் ஒட்டுமொத்தாக உடைந்துபோயிருக்கிறது இலங்கை. நெதர்லாந்து, இங்கிலாந்து என இரண்டே வெற்றிகள். அடுத்தடுத்த தோல்விகளால் இலங்கை அரசு கிரிக்கெட் போர்டை கலைக்க, அரசியல் ஈடுபாட்டால் இலங்கை கிரிக்கெட் சங்கத்தையே சஸ்பெண்ட் செய்திருக்கிறது ஐசிசி. அது இப்போதைக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தப்போவதில்லை என்றாலும், அந்த நாட்டின் கிரிக்கெட்டை இந்த உலகக் கோப்பை செயல்பாடு உடைத்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஒன்பதாவது இடம் பிடித்ததன் மூலம் 2025 சாம்பியன்ஸ் டிராபி வாய்ப்பையும் இழந்துவிட்டது இலங்கை. பல ஸ்டார் பிளேயர்கள் இருந்தாலும், மதுஷன்கா, நிசங்கா, சமரவிக்ரமா போன்ற வீரர்கள் நல்ல பெர்ஃபாமன்ஸ்களை தொடர்ந்து கொடுத்தாலும், ஒரு அணியாக கிளிக் ஆகத் தவறிவிட்டது இலங்கை. கிரிக்கெட் போர்ட் கலைப்பு, மேத்யூஸ் டிஸ்மிசல், குசல் மெண்டிஸ் பிரஸ் மீட் என டிராமாக்களே மிச்சம்!

Srilanka Cricket Team

பாசிட்டிவ்: இங்கிலாந்துக்கு எதிரான மிகப் பெரிய வெற்றி

நெகட்டிவ்: இலங்கை கிரிக்கெட் கிட்டத்தட்ட அனைத்தையுமே இழந்துவிட்டது.

டாப் பெர்ஃபாமர்: தில்ஷன் மதுஷன்கா

ஏமாற்றம்: மஹீஷ் தீக்‌ஷனா

10. நெதர்லாந்து

நெதர்லாந்தின் உலகக் கோப்பைச் செயல்பாட்டுக்கு நிச்சயம் பாஸ் மார்க் கொடுக்கலாம். ஒவ்வொரு அணியையும் அலறவிட்டுக்கொண்டிருந்த தென்னாப்பிரிக்காவைத் தோற்கடித்தது, அவர்கள் கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கிய இடத்தைப் பிடிக்கும். வங்கதேசத்துக்கு எதிரான வெற்றி, இலங்கைக்கு எதிரான போராட்டமும் அந்த அணியின் உலகக் கோப்பை ஹைலைட்கள். அந்த டாப் ஆர்டர் கொஞ்சமேனும் சிறப்பாகச் செயல்பட்டிருந்திருந்தால் நிச்சயம் நெதர்லாந்து அணி இன்னும் பெரிய தாக்கம் ஏற்படுத்தியிருக்கும். குறைந்தபட்சம் இன்னொரு போட்டியையாவது வென்றிருக்கும். அவர்கள் மிடில் ஆர்டர் ஒவ்வொரு போட்டியிலும் போராடியது நிச்சயம் பாராட்டப்படவேண்டியது. பேட்டிங், கேப்டன்சி இரண்டிலும் சிறப்பாகச் செயல்பட்ட அவர்களின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் இந்தத் தொடரின் மிகச் சிறந்த வீரர்களுள் ஒருவராக அறியப்படுவார்.

SA v NED

பாசிட்டிவ்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான வெற்றி

நெகட்டிவ்: தொடர்ந்து தடுமாறிய அவர்களின் டாப் ஆர்டர்

டாப் பெர்ஃபாமர்: சைபிராண்ட் எங்கல்பிரெக்ட்

ஏமாற்றம்: மேக்ஸ் ஓ’தௌத்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.