இந்தியா – நியூசிலாந்து அணிகள் உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் மல்லுக்கட்ட உள்ளன. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்ற நிலையில், இந்திய அணிக்கு சாதகமாக இப்போது பிட்ச் மாற்றப்பட்டிருப்பதாக பெரிய சர்ச்சை எழுந்துள்ளது. ஐசிசி மைதான மேற்பார்வையாளர் அட்கின்சன் மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டிக்கு ஏழாம் நம்பர் பிட்சை பயன்படுத்துமாறு கூறியுள்ளார். அதற்கு ஏற்ப பிட்ச் வான்கடேவில் தயார் செய்யப்பட்டிருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு மைதானத்துக்கு நேரில் வந்து பார்த்த இந்திய அணியின் பயிற்சியாளர்கள் குழு, பிட்சில் அதிக புற்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.
உடனடியாக மைதான ஊழியர்களிடம் பிட்சில் இருக்கும் புற்களை அகற்றுமாறு அறிவுறுத்தியிருக்கின்றனர். இதுவே பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. ஏனென்றால் போட்டி நடத்தும் நாடு தங்களுக்கு சாதகமாக பிட்சை அமைக்குமாறு வற்புறுத்துவது சரியான அணுகுமுறை இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சூழலில் தான் இந்தியா – நியூசிலாந்து விளையாடும் பிட்சும் இப்போது மாற்றப்பட்டிருக்கிறது. பிசிசிஐ இரவோடு இரவாக இந்த தகவலை ஐசிசிக்கு தெரிவித்திருக்கிறது. இதற்கு ஐசிசி மைதான மேற்பார்வையாளர் அட்கின்சன் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார். உலக கோப்பையை நடத்தும் நாடு தங்களுக்கு சாதகமாக எப்படி பிட்சை மாற்ற முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தன்னுடைய அதிருப்தியையும் ஐசிசிக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளாராம்.
நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஊடகங்களில் உலக கோப்பை அரையிறுதிப் போட்டிக்கான பிட்ச் மாற்றப்பட்டிருப்பது பெரிய செய்தியாக வெளியிட்டுள்ளன. இப்போது மும்பை வான்கடேவில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் விளையாடும் பிட்ச் ஏற்கனவே இரண்டு போட்டிகள் நடத்தப்பட்ட பிட்ச் ஆகும். தென்னாப்பிரிக்கா – இங்கிலாந்து, இந்தியா – இலங்கை போட்டிகள் இந்த பிட்சில் தான் நடத்தப்பட்டன. ஆறாம் நம்பர் கொண்ட இந்த பிட்சில் இந்திய அணி ஏற்கனவே விளையாடி இருப்பதால், அரையிறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும் என்ற முனைப்பில் இப்படியொரு முடிவை பிசிசிஐ எடுத்திருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இந்திய அணி தங்களுக்கு சாதகமாக இருக்கும் வகையில் பிட்ச் அமைத்து இந்த உலக கோப்பையில் விளையாடி வருவதாக நியூசிலாந்து அணியின் முன்னணி ஊடகமான ஸ்டப் கடுமையான குற்றச்சாட்டுகளையும், சந்தேகங்களையும் கிளப்பியுள்ளது.