குழந்தையின்மை பிரச்னைக்கு ஐ.வி.எஃப் (In vitro fertilization) கருத்தரித்தல் மையம் மூலம் தீர்வுகாணும் சிகிச்சை, பலரது வாழ்வில் மகிழ்ச்சியை அதிகரித்திருக்கிறது. கருத்தரித்தல் மையம், கருமுட்டை விற்பனை, ஆண்களின் அணுக்கள் விற்பனை என லட்சங்களில் நடக்கும் வியாபாரமாகவும், அது வேறொரு வகையில் வளர்ந்து வருகிறது. அதே நேரம், பொருளாதாரத்தில் நலிவடைந்த சிறுவர், சிறுமிகளிடம் பணம் தருவதாக ஆசைவார்த்தைக் கூறி ஏமாற்றுவது என வேறொருபக்கம் சட்ட விதிமீறல்களும், குற்றச்சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் இத்தகைய சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது.

வாரணாசி காவல் நிலையத்துக்கு ஒரு தாயும், மகளும் வந்து தாங்கள் ஏமாற்றப்பட்டதாகப் புகார் அளித்திருக்கிறார்கள். அந்தப் புகாரில், `IVF மையத்தில் கருமுட்டையை தானம் செய்தால், ரூ.30,000 தருவதாக சீமா தேவி என்பவரும் அவரின் கணவர் ஆஷிஷ் குமாரும் எங்களிடம் வாக்களித்தார்கள். நாங்களும் அதற்குச் சம்மதித்தோம். கருமுட்டை தானம் செய்வதற்கான தகுதியடைந்தவராக என் 17 வயது மகளைக் காண்பிக்க, பிறந்த தேதியில் மாற்றம் செய்து போலி ஆதார அட்டையைத் தயார் செய்தார்கள். பின்னர், நெற்றியில் குங்குமம், கழுத்தில் தாலி அணியக் கொடுத்தனர்.
எங்களை முக்கியமான ஐ.வி.எஃப் மையத்துக்கு அழைத்துச் சென்று, என் மகளிடமிருந்து கருமுட்டையை எடுத்துக்கொண்டார்கள். ஆனால், உறுதியளித்தபடி ரூ.30,000-க்கு பதிலாக ரூ.11,500 மட்டுமே கொடுத்தனர். எனவே, எங்களை ஏமாற்றிய தம்பதியைக் கைதுசெய்ய வேண்டும். எங்களுக்கு வர வேண்டிய பணத்தை மீட்டுத்தர வேண்டும். மேலும், ஐ.வி.எஃப் மையத்தின்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவித்தனர். இந்தச் செய்தியைக் கேட்டு அதிர்ந்த காவல்துறை, இது தொடர்பாக விசாரிக்கத் தொடங்கியது.

விசாரணைக்குப் பிறகு, பொருளாதாரரீதியாக நலிவடைந்த சிறுமிகளை, ‘இன் விட்ரோ ஃபெர்ட்டிலைசேஷன்’ (ஐ.வி.எஃப்) மையங்களுக்கு சப்ளை செய்த ஆர்.எஸ்.கௌதம், துளசிபூர் மஹ்மூர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த அன்மோல் ஜெய்ஸ்வால் (29), ஆஷிஷ் யாதவ், கோஜ்வாவைச் சேர்ந்த அனிதா தேவி (34), சீமா தேவி (30), நக்கிகாட் நவாபூரைச் சேர்ந்த அவரின் கணவர் ஆஷிஷ் குமார் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட தம்பதியிடமும் அவர்களின் கூட்டாளிகளிடமும் விசாரணை மேற்கொண்டதில், பொருளாதாரரீதியாக நலிவடைந்த பெண்களைக் குறிவைத்து ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பலை நடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இந்தியாவில் கருமுட்டை தானம் செய்வதற்கென சில விதிமுறைகள் இருக்கின்றன. இது குறித்து, தலைமை மருத்துவ அதிகாரி (சி.எம்.ஓ) டாக்டர் நிகுஞ்ச் வர்மா, “கருமுட்டை தானம் செய்யும் பெண் 23 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் மூன்று வயதுக்குட்பட்ட ஒரு குழந்தையுடன் திருமணமானவராக இருக்க வேண்டும். ஒரு பெண் தன் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கருமுட்டைகளை தானம் செய்ய முடியும். ஏழு முட்டைகளுக்கு மேல் ஒரு பெண்ணிடமிருந்து பெற முடியாது” எனத் தெரிவித்திருக்கிறார்.