நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகிலுள்ள கோழித்துறை பகுதியைச் சேர்ந்தவர்கள் ரகுநாதன்- ராணி தம்பதி. இரண்டு மகள்கள், ஒரு மகனுடன் வாழ்ந்து வந்திருக்கின்றனர். இன்று காலை வழக்கத்துக்கு மாறாக நீண்ட நேரமாகியும் இவர்களின் வீட்டுக்கதவு திறக்கப்படவில்லை. அதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கதினர், கதவைத் தட்டிப்பார்த்திருக்கின்றனர். யாரும் திறக்கவில்லை. அதையடுத்து, ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப்பார்த்திருக்கின்றனர்.

அப்போது, ரகுநாதன் தூக்கில் தொங்கியபடியும், அருகில் ரத்தவெள்ளத்தில் ராணி சடலமாகக் கிடப்பதையும் கண்டு, அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர். விரைந்து வந்த கோத்தகிரி காவல்துறையினர், இருவரின் சடலங்களையும் மீட்டு, உடற்கூறாய்வுக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்திருக்கின்றனர். இந்தச் சம்பவம் குறித்துக் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், தனது குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறில் மனைவி ராணியைத் தாக்கிக் கொன்றுவிட்டு, ரகுநாதனும் தற்கொலை செய்துகொண்டிருப்பதைக் கண்டறிந்திருக்கின்றனர்.
இது குறித்துப் பேசிய போலீஸார், “ரகுநாதன் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகியிருக்கிறார். இதனால் நாள்தோறும் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. நேற்று இரவு மதுபோதையில் வந்த ரகுநாதனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர், அவர் குடும்பத்தினர். அதில், ஆத்திரமடைந்த ரகுநாதன் குழந்தைகளைத் தாக்கியிருக்கிறார்.

அதை மனைவி ராணி தடுக்க முயற்சி செய்திருக்கிறார். அதையடுத்து குழந்தைகளை வெளியே அனுப்பிய ரகுநாதன், ராணியைக் கட்டையால் கடுமையாகத் தாக்கியிருக்கிறார். ரத்தவெள்ளத்தில் சரிந்த ராணி, பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். மனைவி உயிரிழந்ததைக் கண்ட பயத்தில், ரகுநாதன் தூக்கிட்டு தற்கொலைசெய்திருக்கிறார். இது குறித்து மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.