தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்

சென்னை: ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோத்தாக்களையும் மீண்டும் நிறைவேற்றும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் இன்று (நவ.18) முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த அரசின் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காக, தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று (நவ.18) காலை கூடியது. அவை கூடியவுடன் சபாநாயகர் அப்பாவு மறைந்த முக்கியப் பிரமுகர்கள், முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானங்களை வாசிக்க அவை உறுப்பினர்கள் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் முதல்வர் ஸ்டாலின் அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார். ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களையும் மீண்டும் நிறைவேற்றும் வகையில் தீர்மானத்தை அவர் கொண்டுவந்தார். அப்போது பேசிய முதல்வர், “மக்களாட்சி தத்துவத்தின்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது ஆளுநரின் கடமை. இது தொடர்பாக சட்ட ரீதியாக அல்லது நிர்வாக ரீதியாக விளக்கம், சந்தேகம் இருந்தால் அரசிடம் கேட்கலாம். ஒருபோதும் ஆளுநர் கோரிய விளக்கங்கள் கொடுக்கப்படாமல் இருந்ததில்லை.

ஆனால் ஆளுநர் ரவி தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளால், சட்டமுன் வடிவுகளை திருப்பி அனுப்பியிருப்பது, தமிழ்நாட்டு மக்களையும், சட்டமன்றத்தையும் அவர் அவமதிக்கிறார் எனப் பொருள். இது சட்டவிரோதம், மக்கள் விரோதம், ஜனநாயக விரோதம், மனசாட்சி விரோதம், அதையும்விட சட்டமன்றத்தின் இறையான்மைக்கு எதிரானது. அரசியலமைப்பு சட்டத்துக்கு முழுவதும் மாறாக ஆளுநர் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார்.

பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் ஆளுநர் மூலமாக பிரச்சினைகளை உருவாக்கி வருகிறார்கள். ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவி. அகற்றப்பட வேண்டிய பதவியாக இருந்தாலும், அது இருக்கும் வரை மக்களாட்சிக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் ” என்று பேசினார்.

முதல்வர் பேசியதை அடுத்து சபாநாயகர் அப்பாவு, ஆளுநரை விமர்சிக்காமல், தனிப்பட்ட விமர்சனங்களைக் கூறாமல் தீர்மானத்தின் மீது பேசலாம் என்று சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அனுமதியளித்தார்.

தொடர்ந்து பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் எஸ்.வேல்முருகன், கொமதேக-வின் ஈஸ்வரன், மமகவின் ஜவாஹிருல்லா, காங்கிரஸ் கட்சியின் செல்வப் பெருந்தகை, விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ.,க்கள் என அனைவரும் முதல்வரின் தீர்மானத்தை ஆதரித்துப் பேசினர்.

ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டதை ரத்து செய்ததைக் கண்டித்து அதிமுக எம்எல்ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர். தனித் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பாகவே அவையிலிருந்து அவர்கள் வெளியேறினர்.

அதேபோல், தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவும் வெளிநடப்பு செய்தது. முன்னதாக சட்டப்பேரவையில் பேசிய பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், “சட்டமன்றம் மிகப்பெரிய மாண்பும், மரபும் மிக்கது. இதனை பொதுக்கூட்ட மேடையாக மாற்றிவிடக்கூடாது. கருத்து வேறுபாடு பல இருக்கலாம். வேந்தர்களை நியமனம் செய்வதில் ஆளுநர்களுக்குத்தான் அதிகாரம் வேண்டும் என்று, இதே சபையில் கலைஞர் கருணாநிதி தீர்மானம் கொண்டு வந்தார். ஆனால், இன்று, தீர்மானம் வேறுவிதமாக இருக்கிறது. இது சட்டமன்றத்துக்கு முரண்பாடாக இருப்பதாக நான் கருதுகிறேன். துணை வேந்தர்கள் நியமனத்தில் ஆளுநருக்கே அதிகாரம் உள்ளது என்று அரசியல் சாசனமே சொல்கிறது” என்றார்.

அதற்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், ”அப்போதெல்லாம் ஆளுநர் அரசுடன் பேசிதான், துணைவேந்தர்களை நியமிப்பார். ஆனால் இப்போது அப்படியல்ல. அதனால்தான் இதை தற்போது கடுமையாக எதிர்க்கிறோம்” என்று கூறினார்.

பின்னர் சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் அரசின் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.