சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகேயுள்ள சேடப்பட்டியைச் சேர்ந்தவர் பசுவராஜ். இவர் கல் உடைக்கும் வேலைப்பார்த்து வருகிறார். இவரின் மனைவி செல்வி. கடந்த சில மாதங்களாக பசுவராஜ் பெங்களூருவில் கல் உடைக்கும் வேலைப்பார்த்து வந்திருக்கிறார். தினமும் தன்னுடைய மனைவியிடம் போனில் பேசுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்திருக்கிறார். கடந்த 15-ம் தேதி செல்போனில் தன் மனைவியைத் தொடர்பு கொண்டபோது, அவர் அழைப்பை ஏற்காமல் இருந்திருக்கிறார். பின்னர் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் சந்தேகமடைந்த பசுவராஜ், தனது வீட்டுக்கு வந்து பார்த்தபோது, மனைவி செல்வி அங்கு இல்லை என்பது தெரியவந்திருக்கிறது.
இதனால் பதறிப்போன பசுவராஜ், தாரமங்கலம் காவல் நிலையத்தில் தன்னுடைய மனைவியைக் காணவில்லை என்று புகார் அளித்திருக்கிறார். புகாரை ஏற்று விசாரணை செய்து வந்த போலீஸார், தாரமங்கலம் பேருந்து நிலையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்திருக்கின்றனர்.

அப்போது செல்வி பேருந்தில் ஏறிச்சென்ற சிசிடிவி காட்சிகள் கிடைத்தன. பின்னர் அவர் எந்தப் பேருந்தில் ஏறினார் உள்ளிட்ட தகவல்களை போலீஸார் திரட்டி, அவர் இரும்பாலை அருகேயுள்ள பெருமாள்பட்டியிலுள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோயிலுக்குச் சென்றதைக் கண்டறிந்தனர்.
அதையடுத்து போலீஸார் அந்தக் கோயில் பகுதிக்கு நேற்று மாலை சென்று விசாரணை செய்ததில், அந்தக் கோயிலிலிருந்து 50 மீட்டர் தொலைவில் செல்வி மர்மமானமுறையில் இறந்துகிடந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. வாயில் நுரை தள்ளி விஷம் குடித்து இறந்ததுபோல் தெரிந்திருக்கிறது. மேலும் அவர் கழுத்தில் அணிந்திருந்த நகையைக் காணவில்லை. அதனால் யாரேனும் அவரைக் கொலைசெய்துவிட்டு, நகையைத் திருடிச் சென்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகம் கொண்டனர். பின்னர் செல்வியின் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.

அதில் செல்வியுடன், பெருமாள்பட்டி பெரியாண்டிச்சி அம்மன் கோயில் பூசாரியான பாறைக்காடு பகுதியைச் சேர்ந்த குமார் என்பவருக்குப் பழக்கம் இருப்பது தெரியவந்தது. அதன்பேரில் பூசாரி குமாரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் செல்விக்கு குளிர்பானத்தில் சயனைடு கலந்து கொடுத்து கொலைசெய்ததை, அவர் ஒப்புக்கொண்டார். உடனே அவரைக் கைதுசெய்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரியாண்டிச்சி அம்மன் கோயிலுக்கு குறி கேட்பதற்காக செல்வி சென்றிருக்கிறார். அப்போது பூசாரி குமாருடன், அவருக்குப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. நாளடைவில் இருவருக்கும் இடையே திருமணம் மீறிய உறவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து வந்திருக்கின்றனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு முப்பதாயிரம் ரூபாய் பணத்தை பூசாரி குமாரிடமிருந்து செல்வி வாங்கியிருக்கிறார்.

அந்தப் பணத்துக்கு பெங்களூருவிலிருந்து தன்னுடைய கணவர் மூலம் குறைந்த விலைக்கு தங்கக்காசு வாங்கித் தருவதாகச் சொல்லியிருக்கிறார். ஆனால், தங்கக்காசு வாங்கிக் கொடுக்காமல் இருந்திருக்கிறார். கடந்த 15-ம் தேதி கோயிலுக்கு வரும்படி செல்வியை குமார் அழைத்திருக்கிறார். அதன்படியே அவர் வந்திருக்கிறார். வந்த இடத்தில் தன்னுடன் உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று குமார் கூறியிருக்கிறார். அதற்கு செல்வி மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தனது பணத்தைத் திருப்பி தராமல், உறவுக்கு வர மறுத்ததால், குளிர்பானத்தில் சயனைடு கலந்து கொடுத்து செல்வியைக் கொலைசெய்துவிட்டு, அவர் கழுத்தில் அணிந்திருந்த நகையை எடுத்துக்கொண்டு தப்பியது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.