Whose World Cup?: Final today | உலக கோப்பை யாருக்கு ?: இன்று பைனல்

ஆமதாபாத்: ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உலக கோப்பை தொடர் பைனலில் இன்று இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் இந்திய அணி சாதித்து மூன்றாவது முறையாக உலக கோப்பை வெல்ல வேண்டுமென ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்தியாவில் 13வது உலக கோப்பை தொடர் நடக்கிறது. நியூசிலாந்து, தென் ஆப்ரிக்க அணிகள் அரையிறுதியுடன் திரும்பின. குஜராத்தின் ஆமதபாத்தில் உள்ள உலகின் பெரிய மோடி மைதானத்தில் இன்று நடக்கும் பைனலில் உலகத் தரவரிசையில் ‘நம்பர்-1’ ஆக உள்ள இந்தியா, ‘நம்பர்-2’ இடத்திலுள்ள ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.

சொந்த மண்ணில் களமிறங்கும் இந்திய அணி வலுவாக உள்ளது. லீக் சுற்றில் 9, அரையிறுதி என தொடர்ந்து 10 போட்டிகளில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது. கேப்டன் ரோகித் சர்மா (550 ரன்), இளம் வீரர் சுப்மன் கில்(350) நல்ல துவக்கம் தர காத்திருக்கின்றனர். ‘மிடில் ஆர்டரில்’ வரும் கோலி (711), ஒருநாள் அரங்கில் 50 சதம் அடித்த உற்சாகத்தில் உள்ளார். ஸ்ரேயாசும் (526), நல்ல பார்மில் உள்ளார். ராகுல் (386) தன் பங்கிற்கு நம்பிக்கை தருகிறார். இவர்களுடன் சூர்யகுமாரும் (88) விளாசினால், ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி தரலாம்.

இந்திய அணியின் பவுலிங் மிரட்டுகிறது. ‘வேகத்தில்’ பும்ரா (18), முகமது சிராஜ் (13) அசத்துகின்றனர். 4 போட்டிக்குப் பின்பு வாய்ப்பு பெற்ற முகமது ஷமி துாள் கிளப்புகிறார். அதிக விக்கெட்(23) வீழ்த்திய பவுலர்களில் முதலிடத்தில் உள்ளார்.

‘சுழலில்’ குல்தீப் (15), ஜடேஜா (16) கைகொடுக்க உள்ளனர். ஆடுகளத்திற்கு ஏற்ப, கடைசி நேரத்தில் அணியில் மாற்றம் செய்யப்பட்டால், சிராஜ் இடத்தில் அஷ்வின் சேர்க்கப்படலாம். அரையிறுதியில் தவறவிட்ட ‘கேட்ச்’ வாய்ப்புகள், பீல்டிங்கில் ஏற்பட்ட தவறுகளை இன்று சரிசெய்யும் பட்சத்தில், உலக கோப்பை கனவு நிச்சயம் நனவாகும்.

உலக கோப்பை அரங்கில் ஐந்து முறை சாம்பியன் ஆன அணி ஆஸ்திரேலியா. இம்முறை லீக் போட்டியில் இந்தியாவுக்கு நெருக்கடி தந்தது. பைனலில் பதட்டமின்றி விளையாடும் அனுபவம் கொண்டது. பேட்டிங்கில் வார்னர் (528), ஹெட் (192) ஜோடி சிறப்பான துவக்கம் தரலாம். ‘மிடில் ஆர்டரில்’ லபுசேன் (304), ஸ்மித் (298), மிட்சல் மார்ஷ் (426) என பேட்டிங் வரிசை வலுவாக காணப்படுகிறது. பின் வரிசையில் வரும் ‘ஆல் ரவுண்டர்’ மேக்ஸ்வெல்லும் (398) அணிக்கு பலம் சேர்க்கிறார். பந்துவீச்சில் ‘சுழல்’ வீரர் ஜாம்பா, இதுவரை 22 விக்கெட் சாய்த்துள்ளார். ‘வேகத்தில்’ அனுபவம் வாய்ந்த ஹேசல்வுட் (14), ஸ்டார்க் (13), கேப்டன் கம்மின்ஸ் (13) கூட்டணி மிரட்டலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.