உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி அஹமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டிக்கு இடையே ரசிகர் கூட்டத்திலிருந்து ஒருவர் பாலஸ்தீனுக்கு ஆதரவாக மைதானத்திற்குள் ஓடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸை வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணி இப்போது வரை 17 ஓவர்களில் 104 ரன்களை அடித்து 3 விக்கெட்டுகளை இழந்திருக்கிறது. ரோஹித், கில், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ஆட்டமிழந்திருக்கின்றனர். இப்போது இந்திய அணி சார்பில் விராட் கோலியும் ரோஹித்தும் பேட்டிங் ஆடிக்கொண்டிருந்தனர்.

அந்த சமயத்தில் மைதானத்திற்குள் திடீரென ‘ஃப்ரீ பாலஸ்தீன்’ வாசகம் பொறிக்கப்பட்ட டீசர்ட்டுடன் ‘LGBTQ’ க்கு ஆதரவளிக்கும் வகையில் வானவில் கொடியை ஏந்தியும் ஒரு நபர் ஓடி வந்து கோலியை கட்டிப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பாதுகாவலர்கள் அவரை பிடித்து களத்திலிருந்து வெளியேற்றினர்.
நடப்பு உலகக்கோப்பையில் இதற்கு முன்பாகவும் சில போட்டிகளில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பதாகைகளை ஏந்தி வந்த ரசிகர்களை பாதுகாவலர்கள் வெளியேற்றிய சம்பவங்களும் நடந்திருக்கிறது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பிற்கும் இடையே 40 நாட்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது.
எக்கச்சக்கமான சாமானியர்கள் இந்தப் போரினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கின்றனர். இந்த போருக்கு எதிராகவும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் பலரும் பேசி வருகின்றனர். அந்த சம்பவங்களின் தாக்கம் கிரிக்கெட்டின் மாபெரும் மேடையான உலகக்கோப்பையிலும் வெளிப்பட்டுருக்கிறது.