இந்திய அணி அதன் சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்தது கிரிக்கெட்டிற்கு மிகவும் நல்லது- பாக். முன்னாள் வீரர் அப்துல் ரசாக் சர்ச்சை க…

கராச்சி,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 5-ந்தேதி இந்தியாவில் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் அரைஇறுதி முடிவில் இந்தியா- ஆஸ்திரேலியா இறுதி போட்டிக்கு முன்னேறின. இதில் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது.

வலுவான அணிகளை தோற்கடித்த இந்தியா வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பதிவு செய்து சாதனை படைத்தது. மேலும் தற்போதைய அணியில் அனைத்து வீரர்களுமே உச்சகட்ட பார்மில் இருந்ததால் கண்டிப்பாக இம்முறை கோப்பையை வெல்வோம் என்று ரசிகர்கள் உறுதியாக நம்பினர். ஆனாலும் வழக்கம்போல முக்கியமான ஆட்டத்தில் சொதப்பிய இந்தியா தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் இந்த உலகக்கோப்பை தொடரில் இந்தியா அதன் சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்தது கிரிக்கெட்டிற்கு மிகவும் நல்லது என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்துல் ரசாக் சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்ருமாறு;- “கிரிக்கெட் வென்றது இந்தியா தோற்றது. ஒருவேளை இந்தியா உலகக்கோப்பையை வென்றிருந்தால் அது கிரிக்கெட்டிற்கு சோகமான நாளாக அமைந்திருக்கும். ஏனெனில் அவர்கள் தங்களுடைய சொந்த மண்ணில் சூழ்நிலைகளையும் விதிமுறைகளையும் சாதகமாக பயன்படுத்தினார்கள். குறிப்பாக அகமதாபாத் பிட்ச் போல இதற்கு முந்தைய ஐசிசி பைனல்களில் மோசமான பிட்ச்சை நான் பார்த்ததில்லை. எனவே இந்தியா தோல்வியை சந்தித்தது ஒட்டுமொத்த கிரிக்கெட்டிற்கும் மகத்தான செய்தியாகும்” என்று கூறினார்.

முன்னதாக இந்திய பவுலர்கள் ஸ்விங் செய்வதற்காக ஐசிசி-யே புதிய பந்துகளை கொடுப்பதாகவும், டிஆர்எஸ் விதிமுறைகளை ஒளிபரப்பு நிறுவனங்கள் உதவியுடன் இந்தியா தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தியாகவும், ரோகித் சர்மா டாஸ் போடுவதில் ஏமாற்றுவதாகவும் பாகிஸ்தான் அணியின் பல முன்னாள் வீரர்கள் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.