சமீபத்தில் நடந்து முடிந்த, ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான உலகக் கோப்பைத் தொடரில், அரையிறுதிவரை தோற்காமல், 2011 உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு, இறுதிப் போட்டிக்குள் இந்திய அணி நுழைந்தது. இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று இந்திய ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், 2003 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் எப்படி இந்தியா தோற்றதோ, அதேபோலவே 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது இந்தியா.

இதனால், இந்திய அணிக்கு ஒருபுறம் ஆறுதலும், விமர்சனங்களும் வந்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம், “பிரதமர் மோடி அன்றைக்கு இறுதிப் போட்டியைக் காண மைதானத்துக்கு வந்ததால்தான் இந்தியா தோற்றது” என எதிர்க்கட்சிகள் மறைமுகமாகச் சாடியும்வருகின்றன.
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திகூட, “நமது வீரர்கள் கிட்டத்தட்ட ஜெயித்துவிட்டார்கள். ஆனால், இறுதிப் போட்டியில் மைதானத்தில் இருந்த ஓர் அபசகுனத்தால் தோற்றுவிட்டார்கள். PM என்றால் பனௌட்டி (அபசகுனம்) மோடி என அர்த்தம்” என்று தேர்தல் பரப்புரையில் சாடியிருந்தார். அதேபோல், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “உலகக் கோப்பைத் தொடரில் பாவிகள் நேரில் வந்து பார்த்த ஆட்டத்தைத் தவிர மற்ற அனைத்து ஆட்டங்களிலும் இந்தியா வெற்றிபெற்றது” என மறைமுகமாகப் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை விமர்சித்திருக்கிறார்.

இதற்கிடையில், ராகுல் காந்தி பேசியது தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திடம் பா.ஜ.க புகாரளித்தது. தேர்தல் ஆணையமும், சனிக்கிழமைக்குள் விளக்கம் தருமாறு ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இந்த நிலையில், இந்திரா காந்தி பிறந்தநாளில் இறுதிப் போட்டி நடந்ததால்தான் இந்தியா தோற்றதாகவும், இனிமேல் நேரு குடும்பத்தினர் பிறந்தநாளில் போட்டி நடத்த வேண்டாம் என்றும், பா.ஜ.க-வைச் சேர்ந்த அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா காங்கிரஸை விமர்சித்திருக்கிறார்.
நவம்பர் 30-ம் தேதி தெலங்கானாவில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஹைதராபாத்தில் பா.ஜ.க சார்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பேரணியில் பேசிய ஹிமந்தா பிஸ்வா சர்மா, “அன்றைக்கு இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே இறுதிப் போட்டி நடந்தது. அதற்கு முன்பு நடந்த அனைத்துப் போட்டிகளிலும் நாம் வெற்றிபெற்றிருந்தோம்.

ஆனால், அன்றைக்கு மட்டும் தோற்றுவிட்டோம். நாம் இந்து என்பதால், அன்றைக்கு நாம் ஏன் தோற்றோம்… அன்றைக்கு என்ன நாள் என்று பார்த்தேன். அப்போதுதான், அன்றைக்கு இந்திரா காந்தியின் பிறந்தநாள் என்று தெரிந்தது.

இந்திரா காந்தியின் பிறந்தநாளில் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடந்ததால்தான் இந்தியா தோற்றது. எனவே, BCCI-யிடம் ஒன்றைச் சொல்கிறேன், எதிர்காலத்தில் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு ஏற்பாடுசெய்தால், நேரு குடும்பத்தினரின் பிறந்தநாளுடன் இணைந்த நாள்களில் நடத்த வேண்டாம். இல்லையென்றால், அன்றைய நாள் கடினமாகிவிடும்” என்று கூறினார்.