ஹலால் சான்றிதழுக்கு நாடு முழுவதும் தடை விதிக்க வேண்டும்: கர்நாடகா பாஜக தலைவர்கள் வலியுறுத்தல்

புதுடெல்லி: நாடு முழுவதும் உணவு, மருந்து, அழுகுசாதன பொருள்கள் மீதான ஹலால் சான்றிதழுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கர்நாடகா பாஜக தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தக் கோரிக்கையினை வலியுறுத்தி பாஜக எம்எல்ஏ பாசனகவுடா பாடீல் யத்னால் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் எம்எல்ஏ கூறியிருப்பதாவது: “பல்வேறு முஸ்லிம் அமைப்புகள், மத நிறுவனங்கள் என்ற அடையாளத்தின் கீழ், இறைச்சி உற்பத்தி, உணவு பொருள்கள், அழகுசாதனம் மற்றும் பிற நுகர்வு பொருள்கள் மீது ஹலால் சான்றிதழ் வாங்குவதை ஊக்குவித்து வருகின்றன என்று எங்களின் கவனத்துக்கு வந்துள்ளது.

ரெஸ்டாரன்டுகள், உணவகங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் அழகுசாதன பொருள்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கப்படுவது கவலை அளிப்பதாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக உத்தரப் பிரதேச அரசு கடந்த சனிக்கிழமை அம்மாநிலத்தில் ஹலால் தரச் சான்று பெற்ற பொருட்கள் விற்பனை செய்ய தடை விதித்தது. இதுகுறித்து ஹலால் தரச் சான்றுடன் கூடிய உணவுப் பொருட்களின் உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவை உடனடியாக தடை செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்தத் தடைக்கு முன்பாக மாநில போலீஸ் நவ.17-ம் தேதி மத ரீதியான உணர்வுகளின் அடிப்படையில் விற்பனையை அதிகரிக்க போலி ஹலால் தரச் சான்றிதழ் வழங்கிய விவகாரத்தில் சில நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் மீது வழக்குப் பதிவு செய்தது. ஹலால் இந்தியா பிரைவேட் லிமிடெட் சென்னை, ஜமியத் உலமா-இ-ஹிந்த் ஹலால் டிரஸ்ட் டெல்லி, ஹலால் கவுன்சில் ஆஃப் இந்தியா மும்பை, ஜமியத் உலமா மகாராஷ்டிரா உள்ளிட்ட நிறுவனங்கள் இதில் அடங்கும்.

இஸ்லாமிய விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்ட உணவு மற்றும் கலப்படமற்ற பொருள் என்பதற்கான உத்தரவாதம் தான் ஹலால் தரச் சான்று. மேலும், இந்தப் பொருட்கள் பிரத்யேகமாக பதப்படுத்தி வைக்கப்படும். இந்த விதிகளின் கீழ் தடை செய்யப்பட்ட சில விலங்குகள் மற்றும் அது சார்ந்த பொருட்கள் ஒரு குறிப்பிட்ட தயாரிப்பில் இடம்பெற்று இருந்தால் அதற்கு இந்தச் சான்று கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.