சென்னை: சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பாக 10 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது.
தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த செப்டம்பர் 12-ம் தேதி ஒரே நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தை சேர்ந்த தொழிலதிபர் ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், ரத்தினத்தின் உறவினர் கோவிந்தன், மணல் குவாரி அதிபர் கரிகாலன் மற்றும் பொதுப்பணித் துறையில் பணியற்றிய ஓய்வுபெற்ற பொறியாளர் திலகம், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா ஆகியோருக்கு சொந்தமான வீடுகள் மற்றும் எழிலகத்தில் உள்ள நீர்வளத்துறை அலுவலகம் என மொத்தம் 34 இடங்களில் சோதனை நடத்தினர்.
இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்த இந்த சோதனையில் மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் வீடுகளில் இருந்து கணக்கில் வராத பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரூ.12.82 கோடி ரொக்க பணம், ரூ.56.86 லட்சம் மதிப்புள்ள 1024 கிராம் தங்கம் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சோதனையை தொடர்ந்து 10 மாவட்ட ஆட்சியர்கள், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா, ஓய்வு பெற்ற பொதுப் பணித்துறை பொறியாளர் திலகம் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது. இந்த சம்மனை தொடர்ந்து நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் சில முக்கிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகியிருந்தார்.
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த மனுவில், “சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் கனிமவள சட்டம் சேர்க்கப்படாத நிலையில், மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்ப அமலாக்கத் துறைக்கு அதிகார வரம்பு இல்லை. மாநில அரசு அதிகாரிகளை துன்புறுத்தும் நோக்கிலும், அரசு நிர்வாகத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கிலும் அமலாக்கத் துறை செயல்படுகிறது” என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை அவசா வழக்காக விசாரிக்க கோரி நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் வெள்ளிக்கிழமை முறையிட்டார். இந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வரும் திங்கள்கிழமை வழக்கை விசாரிப்பதாக தெரிவித்தனர்.