ஹைதராபாத்: பிஆர்எஸ் கட்சி ஆட்சி அமைத்ததும் முஸ்லிம் இளைஞர்களுக்கு தனி தகவல் தொழில்நுட்ப பூங்கா ஹைதராபாத்தில் அமைக்கப்படும் என தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் நேற்று அறிவித்தார்.
பிஆர்எஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சந்திரசேகர ராவ் தெலங்கானாவில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வருகிறார். ஹேஷ்வரம் தொகுதியில் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் நேற்று பங்கேற்ற அவர் பேசியதாவது:
இத்தொகுதியில் பிஆர்எஸ் கட்சி சார்பில் கல்வி துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டி போட்டியிடுகிறார். இவர் தனது தொகுதி வளர்ச்சிக்காக இரவும், பகலும் உழைக்கிறார். இந்த தொகுதியில் ரூ.670 கோடி செலவில் அனைவருக்கும் குடிநீர் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக மருத்துவ கல்லூரி கட்டப்பட்டுள்ளது. விரைவில் 500 படுக்கைகள் வசதி கொண்ட அரசின் நவீன மருத்துவமனை வரப்போகிறது.
இத்தொகுதியில் 570 புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. அடிப்படை வசதிகளான, குடிநீர், சாலை, வேலை வாய்ப்பு என அனைத்தும் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் காரணம் உங்கள் எம்.எல்.ஏ சபீதா இந்திரா ரெட்டிதான். அவரை நான் வெகுவாக பாராட்டுகிறேன். இவரே மீண்டும் உங்கள் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை ஆதரியுங்கள் என கேட்டுக்கொள்கிறேன்.
முஸ்லிம் சகோதர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்துள்ளோம். ஆதார் அட்டை முதற்கொண்டு அனைத்து அரசு நலதிட்டங்களும், சலுகைகளும் அவர்களுக்கு வழங்கி வருகிறோம்.
அந்த வகையில், முஸ்லீம்களுக்கென தனி தகவல் தொழில்நுட்ப பூங்காவை அமைப்போம். கடந்த 10 ஆண்டுகளில் பிஆர் எஸ் ஆட்சியில் சிறு மத கலவரம்கூட நடைபெற வில்லை. சிறுபான்மையினருக்காக ரூ.12,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு வளர்ச்சி பணிகள் நடந்தன.
ஆனால், காங்கிரஸ் ஆட்சியிலோ ஆண்டுக்கு ரூ.2,000 கோடி மட்டும்தான் நிதி ஒதுக்கப்பட்டது. ஆதலால் வாக்களிக்கும் முன் ஒருமுறை நன்றாக ஆலோசித்து முடிவெடுங்கள் என பேசினார்.