விருதுநகர்: விருதுநகரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கி 2 ஆண்டுகளாகியும் இதுவரை சோலார் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படாமல் சோலார் தகடுகள் காட்சிப் பொருளாகவே காணப்படுகின்றன. லட்சக்கணக்கான ரூபாய் மின் கட்டணம் செலுத்துவதால், கல்லூரி நிர்வாகத்துக்கு கூடுதல் செலவினமும் ஏற்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் அருகே அரசு மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, கடந்த 2020 மார்ச் 1-ம் தேதி நடைபெற்றது. மத்திய அரசு 60 சதவீத பங்குத் தொகையாக ரூ.195 கோடியும், மாநில அரசு 40 சதவீத பங்குத் தொகையாக ரூ.130 கோடியும் அளித்தது.
அதோடு கூடுதல் செலவினங்களுக்காக மாநில அரசு சார்பில் ரூ.55 கோடி அளிக்கப்பட்டு மொத்தம் ரூ.390.22 கோடியில், விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டது. தரைத்தளம் மற்றும் 6 மாடி கட்டிமும், அதோடு, பயிற்சி மருத்துவர் விடுதி, இருப்பிட மருத்துவ அதிகாரி, உதவி இருப்பிட மருத்துவ அதிகாரிகளுக்கான குடியிருப்புகள் போன்றவையும் கட்டப்பட்டு, விருதுநகரிலேயே பிரம்மாண்ட கட்டிடமாக அரசு மருத்துவமனை கட்டிடம் உருவெடுத்துள்ளது. 2022 ஜனவரி 12-ம் தேதி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி உட்பட தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்ட 11 அரசு மருத்துவக் கல்லூரிகளையும் பிரதமர் மோடி காணொலி மூலம் திறந்து வைத்தார்.

அரசு வழிகாட்டுதல்படி தற்போது கட்டப்பட்டு வரும் அனைத்து அரசு கட்டிடங்களிலும் சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பதற்கான சோலார் தகடுகள் பொருத்தப்பட்டு வருகின்றன. அதுபோல், விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கட்டிடம், அலுவலகம், குடியிருப்பு கட்டிடம் உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களின் மேல் தளத்திலும் பல கோடி ரூபாய் செலவில் சூரிய ஒளி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம், இதுவரை விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால், அரசு செலவு செய்த கோடிக்கணக்கான ரூபாய் வீணாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சூரிய ஒளி மின்சாரத்தை பயன்படுத்தத் தொடங்கினால் அரசு மருத்துவக் கல்லூரியின் மின் கட்டணத்தை கணிசமாகக் குறைக்க முடியும் என்றும் கூறினர்.
இதுகுறித்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாக அலுவலர்கள் கூறுகையில், மருத்துவக் கல்லூரி கட்டுமானம் முழுவதும் பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், சூரிய ஒளி மின் உற்பத்தி தொடங்குவதும் பொதுப்பணித்துறை மின்பிரிவிடம்தான் உள்ளது. இதுவரை அவர்கள் பணிகளை முடித்து மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைக்கவில்லை எனத் தெரிவித்தனர்.
இதுகுறித்து, விருதுநகர் அரசு மருத்துவமனை கட்டிடத்தை பராமரித்து வரும் பொதுப்பணித் துறை மின்துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசு மருத்துவக் கல்லூரிக்கு சுமார் ரூ.4 லட்சம் வரை மின் கட்டணம் செலுத்தப்படுகிறது. கல்லூரியில் சூரிய ஒளி தகடுகள் பொருத்தப்பட்டு மின் உற்பத்திக்கு தயாராக உள்ளன. ஆனால், சூரிய ஒளி தகடுகளிலிருந்து மின்சாரத்தை பெறுவது மற்றும் மின்சார அளவீட்டுக் கருவிகள் பொருத்தப்பட வேண்டியுள்ளது. இதற்காக, தமிழக அரசிடம் நிதி கோரி கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீட்டுக்காக காத்திருக்கிறோம். நிதி கிடைத்ததும் சூரிய ஒளி மின்சாரம் பெறும் திட்டம் செயல்படுத்தப்படும். இதனால், அரசு மருத்துவக் கல்லூரிக்கு செலவாகும் மின்சார கட்டணத்தை வெகுவாக குறைக்க முடியும் என்று கூறினர்.