நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த சக்தியும், பண்ருட்டியைச் சேர்ந்த அகல்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதியினர். இவர்களுக்கு சசிதரன் என்ற இரண்டு வயது ஆண் குழந்தை இருந்தது. கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக பண்ருட்டி ஒறையூரில் உள்ள தன்னுடைய அம்மா வீட்டில் வசித்து வந்தார் அகல்யா. கடந்த 22-ம் தேதி மதியம் அகல்யாவின் அழுகுரல் கேட்டு, அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் அவரது வீட்டிற்கு ஓடிச் சென்றனர். அப்போது தரையில் படுத்திருந்த குழந்தை சசிதரனை காட்டிய அவர் `காலையில் குழந்தைக்கு இட்லி ஊட்டி படுக்க வச்சேன். இப்ப பேச்சு மூச்சி இல்லாம கெடக்கறான்’ என்று கதறி அழுதிருக்கிறார். அதையடுத்து அவர்கள் குழந்தை சசிதரனை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தூக்கிச் சென்றனர். அங்கு சசிதரனை பரிசோதித்த மருத்துவர், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினார்.

அத்துடன் குழந்தையின் சடலத்தை உடற்கூராய்வு சோதனைக்காக, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அதேபோல குழந்தை இறந்துபோன தகவல் புதுப்பேட்டை காவல் நிலையத்திற்கும் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து அவர்கள் அகல்யாவிடம் விசாரித்தனர். அப்போது அவர் கூறிய முரண்பட்ட தகவல்களால் சந்தேகமடைந்த போலீஸார், விசாரணையை மேலும் இறுக்கினர். அப்போது அவர், குழந்தையை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார். போலீஸாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், “என் சிறு வயதிலேயே அப்பாவும், அம்மாவும் இறந்துவிட்டனர். அதனால் அத்தை பச்சையம்மாள் வீட்டில்தான் வளர்ந்தேன். எனக்கு 14 வயது இருக்கும்போது, நானும், அத்தை பச்சையம்மாளும் கூலி வேலைக்காக திருச்செங்கோடு சென்றோம். அப்போது அங்கிருந்த சக்தி என்பவர் என்னை காதலிப்பதாக கூறினார்.
எனக்கும் விருப்பம் இருந்ததால், இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். ஆனால் திருமணமான நான்கே மாதத்தில் அவர் என்னை கொடுமைப்படுத்த ஆரம்பித்தார். அதனால் போலீஸில் அவர் மீது புகாரளித்தேன். அப்போது நான் சின்னப் பெண் என்பதால், போலீஸார் அவரை போக்ஸோ வழக்கில் கைது செய்து சிறைக்கு அனுப்பினார்கள். அப்போது நான்கு மாத கர்ப்பமாக இருந்த நான், பண்ருட்டியில் இருக்கும் என் அத்தை வீட்டிற்கு வந்துவிட்டேன். நான் சிறு வயதிலேயே திருமணம் செய்து கொண்டதால், அக்கம் பக்கத்தினர் என்னை கேலியாக பேச ஆரம்பித்தனர். அது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. அத்துடன் குழந்தை இருந்ததால் என்னால் வேலைக்கு போக முடியவில்லை. அந்த விரக்தியால் என் குழந்தை மீது எனக்கு கோபம் வந்தது. அதனால் அவனை கொலை செய்ய முடிவெடுத்தேன்.
சம்பவத்தன்று குழந்தையின் கழுத்தைப் பிடித்து நெரித்தேன். கொஞ்ச நேரத்துக்கு கையையும், காலையும் உதறிய குழந்தை, அதன்பிறகு அடங்கிவிட்டது. அதன்பிறகு அது இறந்துவிட்டது என்பதை உறுதி செய்தேன். அதன் பிறகுதான் குழந்தைக்கு ஏதோ ஆகிவிட்டது என்று அக்கம் பக்கத்தினரிடம் கூறினேன். அப்படி கூறினால், உடனே இடுகாட்டுக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்துவிடுவார்கள் என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் மருத்துவமனைக்கு எடுத்து சென்று விட்டனர்” என்று கூறியிருக்கிறார்.
மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், அதன் கழுத்தில் ரத்தம் கட்டியிருந்ததைப் பார்த்து சந்தேகமடைந்து போலீஸாருக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர். அவர்கள் நடத்திய விசாரணையில்தான் குழந்தையை அகல்யா கொலை செய்தது தெரிய வந்திருக்கிறது. அதையடுத்து அகல்யாவை கைது செய்த போலீஸார், கேப்பர் மலை சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.