மதுரை: தொடர் மழையால் வைகை அணை முழுக் கொள்ளளவை எட்டிய நிலையில், அணையில் இருந்து 4 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள தால், மதுரை வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. இதையடுத்து, அணையில் இருந்து ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டத்துக்கு ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் நேற்று மதுரை வைகை ஆற்றை வந்தடைந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு வைகை ஆற்றில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம் இரு கரைகளையும் தொட்டபடி கரைபுரண்டு ஓடியது.

இதில், யானைக்கல் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இந்த தரைப்பாலத்துக்கு அருகே தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணை பகுதியில் ஆகாய தாமரைச் செடிகள் அதிகமாக இருந்ததால் தடுப்பணையை தாண்டி, தண்ணீர் கடந்து செல்ல முடியவில்லை. அதனால், வைகை ஆற்று தண்ணீர் ஆழ்வார்புரம் ஸ்மார்ட் சிட்டி வைகை கரை சாலையை மூழ்கடித்து போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. இந்தச் சாலை வழியாக அதிக அளவில் வாகனங்கள் சென்று வருகின்றன. செல்லூர், பாத்திமா கல்லூரி, கூடல் நகர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு கோரிப்பாளையம் பகுதியில் இருந்து வாகனங்கள் செல்கின்றன. ஆனால், இந்த சாலையில் அதிக அளவு தண்ணீர் சென்றதால் போக்குவரத்து பாதித்தது. அதையும் மீறி சிலர் கார்கள், இரு சக்கர வாகனங்களில் கடக்க முயன்றபோது அவை பழுதடைந்து நின்றன.

அகற்றப்பட்ட ஆகாயத் தாமரை செடிகள்.
பின்னர் மீட்பு வாகனங்களை வரவழைத்து வாகனங்களை மீட்டனர். இதையடுத்து போலீஸார் வாகன ஓட்டுநர்களை எச்சரித்து மேம்பாலம் வழியாகச் செல்ல அறிவுறுத்தினர். தடுப்பணை பகுதி ஆற்றில் ஆகாய தாமரைச் செடிகளை பொதுப்பணித் துறை அதிகாரிகள் முறையாக அகற்றாததே, இதற்கு முக்கியக் காரணம். இதையடுத்து நேற்று அவசர அவசரமாக இயந்திரங்கள் மூலம் ஆகாய தாமரை செடிகளை அகற்றினர். நீண்ட நாட்களுக்கு பின்பு வைகையில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும் கண்கொள்ளா காட்சியை பொதுமக்கள் மேம்பாலத்தின் மீது நின்றபடி பார்வையிட்டனர். போலீஸார், கரையோரங்களில் நின்றபடி ஆற்றில் மக்கள் யாரும் இறங்காதவாறு கண்காணிக் கின்றனர்.