மாணவர் பாராளுமன்றம் ஊடாக மாணவர்களுக்குக் கிடைக்கும் அனுபவம் மற்றும் பயிற்சிகள் நாட்டின் எதிர்கால தலைமையைக் கட்டியெழுப்புவதில் மிகவும் உதவியளிக்கிறது – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த
மாணவர் பாராளுமன்றம் ஊடாக மாணவர்களுக்குக் கிடைக்கும் அனுபவம் மற்றும் பயிற்சிகள் நாட்டின் எதிர்கால தலைமையைக் கட்டியெழுப்புவதில் மிகவும் உதையளிப்பதாக கல்வி அமைச்சரும் பாராளுமன்ற சபை முதல்வருமான கௌரவ (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். கல்வி அமைச்சில் (24) இடம்பெற்ற இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது விவாதத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் இணைந்துக்கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சர், அரசியல் முறைமை தொடர்பில் படிப்படியாக அனுபவத்தைப் பெற்றுக்கொள்வது நாட்டின் வலுவான அரசியல் எதிர்காலத்துக்கு உதவுவதாகத் தெரிவித்தார். தற்பொழுது நாடு பூராகவும் சுமார் 3000 மாணவர் பாராளுமன்றங்கள் செயற்படுவதாகவும் அதன்மூலம் சிறுபராயம் முதல் பொறுப்புடன் கூடிய ஒழுக்கமான, நேர்மையான தலைமைத்துவத்தை எதிர்காலத்தில் ஏற்படுத்துவதற்கு மாணவர்களை பயிற்சியளிப்பதே தமது அமைச்சின் நோக்கமாகும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உதவி செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன குறிப்பிடுகையில், அரசியலமைப்பின் 3 மற்றும் 4 ஆம் யாப்புக்களின் பிரகாரம் பாராளுமன்றமானது நாட்டின் மிக உயர்ந்த நிறுவனமாகும் எனத் தெரிவித்தார். பாராளுமன்றத்துக்கு சவால்கள் முன்வைக்கப்படும் நிலைமைகள் இருந்தாலும், பாராளுமன்ற ஜனநாயகமானது பல்லாயிரம் வருடங்கள் பழைமையான, மாற்றீடுகள் அற்ற எண்ணக்கருவாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதனையடுத்து, சம்பிரதாயபூர்வமாக மாணவர் பாராளுமன்றம் ஆரம்பிக்கப்பட்டதுடன், “நிலைபேறான அபிவிருத்திக்கு கல்வி முறைமையின் பங்களிப்பும் மாணவர் பாராளுமன்றத்தின் வகிபங்கும்” எனும் தலைப்பில் விவாதம் ஆரம்பமானது. விவாதத்தை அடுத்து மாணவர் பாராளுமன்ற அங்கத்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு பாராளுமன்ற முறைமை தொடர்பில் எழுதப்பட்ட புத்தகத் தொகுதியும் கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மகா சங்கத்தினர், பிரதமரின் மேலதிக செயலாளர் (நிர்வாகம்) ஹர்ஷ விஜேவர்தன, கல்வி அமைச்சின் இணைப்பாடவிதான பணிப்பாளர் கீதானி சுபசிங்க, பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் அதிகாரிகள், இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரியின் அதிபர் கப்டன் நீல் தம்மிக்க வாத்துகாரவத்த, பிரதி அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வை கல்வி அமைச்சு மற்றும் பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்தது.