பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்தார் ஒடிசா முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியன்

புவனேஸ்வர்: ஒடிசா முதல்வரின் தனிச் செயலாளர் பொறுப்பில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான வி.கே.பாண்டியன் பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். மாநில முதல்வரும் பிஜெடி கட்சித் தலைவருமான நவீன் பட்நாயக், மாநில அமைச்சர்கள் முன்னிலையில் பாண்டியன் திங்கள்கிழமை அக்கட்சியில் இணைந்தார்.

தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வி.கார்த்திகேய பாண்டியன், 2000ஆம் ஆண்டு பேட்ச் ஒடிசா கேடர் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்றவர். 2002ஆம் ஆண்டு அம்மாநிலத்தின் கலஹண்டி மாவட்டத்தில் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டார். பின்னர் அங்கு பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியராக பணியாற்றியுள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு முதல் முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராகவும், அவரது வலது கரமாகவும் இருந்து வந்தார்.

இந்தநிலையில் ஒடிசா அரசாங்கத்திலும், ஆளும் கட்சியான பிஜு ஜனதா தள நிர்வாகிகள் மத்தியிலும் நவீன் பட்நாயக்குக்கு அடுத்த இடத்தில் மிகவும் செல்வாக்கு மிகுந்த நபராக வலம் வந்த கார்த்திகேய பாண்டியன், கடந்த அக். 20 ஆம் தேதி விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்திருந்ததார். அவரது விருப்ப ஓய்வுக்கு அக்.23-ம் தேதி மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து , “மாற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் 5டி (Transformational Initiatives) திட்டம் மற்றும் நபின் ஒடிசாவின் தலைவராக வி.கே. பாண்டியன் நியமிக்கப்பட்டார். இந்த பதவி, கேபினெட் அமைச்சருக்கு இணையான பதவி. இதன் மூலம் பாண்டியன் முதல்வருக்குக் கீழ் நேரடியாக பணியாற்றுவார்.

விகே பாண்டியன் விருப்ப ஓய்வு பெற்ற சமயத்தில், பட்நாயக் ஆலோசனையின் பேரிலேயே அவர் விருப்ப ஓய்வு பெற்றதாகவும், விரைவில் அவர் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் கூறப்பட்டது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலிலும் அவர் களமிறங்கலாம் என்றும் பிஜு ஜனதா தளம் கட்சியில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் பலரும் கருதினர். இந்த நிலையில் வி.கே. பாண்டியன் முதல்வர் முன்னிலையில் பிஜு ஜனதா தளம் கட்சியில் முறையாக இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.