டெல் அவிவ்,
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, அக்டோபர் 7-ந்தேதி ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதுடன் எல்லை பகுதியையும் சூறையாடி, வன்முறையில் ஈடுபட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்தது.
இரு தரப்பினருக்கும் இடையே ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வந்த இந்த போரில், 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர். 2,700 பேர் காணாமல் போயுள்ளனர். இஸ்ரேலில் 1,200 பேர் உயிரிழந்து இருக்கின்றனர்.
இந்த சூழலில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்தன. இதன்படி, கடத்தப்பட்ட 240 பேரில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என 50 பேர் 4 நாட்களில் அடுத்தடுத்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் இதனால், இருதரப்பு மோதலும் 4 நாட்களுக்கு நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
எகிப்து, அமெரிக்கா மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் மேற்கொண்ட மத்தியஸ்த முயற்சியின் பலனாக, முதலில் 13 பேரும், பின்னர் 17 பேரும் என ஹமாஸ் அமைப்பு பிடித்து வைத்திருந்த பணய கைதிகள் அடுத்தடுத்து விடுவிக்கப்பட்டனர். 4-வது நாளில் 11 பேரை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது.
இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் நேற்றுடன் முடிவுக்கு வந்த நிலையில், கத்தார் நாட்டின் மத்தியஸ்த பேச்சுவார்த்தையின் பலனாக, கூடுதலாக 2 நாட்களுக்கு போர்நிறுத்த ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது. இதனால், பணய கைதிகள் விடுவிப்புக்கான சாத்தியமும் தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது.
போர்நிறுத்த ஒப்பந்தம் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்ட சூழலில், இன்று விடுவிக்கப்படவுள்ள இஸ்ரேல் பணய கைதிகளின் பட்டியல் ஒன்று இஸ்ரேல் நாட்டு பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகத்திற்கு வந்தடைந்து உள்ளது. இதனை தி டைம்ஸ் ஆப் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதுவரை 69 பணய கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவித்து உள்ளது. கடந்த 3 நாட்களில் இஸ்ரேல் மற்றும் இஸ்ரேல் அல்லாதவர்கள் என 69 பணய கைதிகள் விடுவிக்கப்பட்டு உள்ளனர். இதற்கு ஈடாக, 150 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுவித்து உள்ளது.
இதேபோன்று, அமெரிக்க வெளியுறவு மந்திரி பிளிங்கனின் இஸ்ரேல் மற்றும் மேற்கு கரைக்கான பயணத்தின்போது, காசாவில் ஹமாஸ் பிடித்து வைத்துள்ள மீதமுள்ளவர்களை பாதுகாப்பாக மீட்பதற்காக நடந்து வரும் முயற்சிகள் பற்றி ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பாலஸ்தீனியர்களுக்கான மனிதநேய உதவி மற்றும் மக்களை பாதுகாப்பதுடன், தன்னை பாதுகாத்து கொள்ளும் இஸ்ரேலின் உரிமை ஆகியவை பற்றியும் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.