தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலை, அடுத்தாண்டு நடக்கவிருக்கும் லோக் சபா தேர்தலில் தங்களுக்கான வெற்றியை இணைக்கும் புள்ளியாகக் கருதுகிறது காங்கிரஸ். இதன் காரணமாக, ஐந்து மாநிலத் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டிவரும் காங்கிரஸ், தெலங்கானாவில் சற்று கூடுதல் கவனம் செலுத்திவருகிறது.

தெலங்கானா தேர்தல் பிரசாரங்கள் முழுக்க, `பா.ஜ.க-வின் பி டீம் பி.ஆர்.எஸ். மத்தியில் பா.ஜ.க-போல, மாநிலத்தில் ஊழல் நிறைந்த அரசு பி.ஆர்.எஸ் அரசு’ என்று காங்கிரஸ் அழுத்தமாகக் கூறிவருகிறது. இந்த நிலையில், மத்தியில் மோடியைத் தோற்கடிக்க வேண்டுமானால், முதலில் கே.சி.ஆரை தோற்கடிக்க வேண்டும் என்றும், இந்த சித்தாந்தப் போட்டியில் சமரசம் செய்துகொள்ளமாட்டேன் என்றும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி சூளுரைத்திருக்கிறார்.
ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டு பேசிய ராகுல் காந்தி, “டெல்லியில் மோடியைத் தோற்கடிக்க வேண்டுமானால், தெலங்கானாவில் பி.ஆர்.எஸ் தலைவரும், முதல்வருமான கே.சந்திரசேகர ராவை முதலில் தோற்கடிக்க வேண்டும். மிகவும் ஊழல் நிறைந்த அரசை நடத்திவருகிறார் இவர். ஆனாலும், அமலாக்கத்துறை, சி.பி.ஐ, வருமான வரித்துறை என மத்திய அமைப்புகள் எதுவும் அவரை விசாரிக்கவில்லை.

அதேசமயம், முதன்முறையாக அவதூறு பேச்சுக்காக இரண்டு ஆண்டுகள் எனக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. என்னுடைய எம்.பி பதவி பறிக்கப்பட்டது. எனக்கு ஒதுக்கப்பட்ட அரசு இல்லம் பறிக்கப்பட்டது. அது எனக்குத் தேவையுமில்லை என்று கூறினேன். ஏனெனில், நாட்டின் கோடிக்கணக்கான ஏழை மக்களின் இதயங்களில் எனது வீடு இருக்கிறது. சித்தாந்தரீதியிலான போட்டி இது. ஒருபோதும் இதில் சமரசம் செய்துகொள்ள மாட்டேன்” என்றார்.
நாளை மறுநாள் (நவம்பர் 30) தெலங்கானாவில் வாக்குப்பதிவு முடிந்ததும், டிசம்பர் 3-ம் தேதி ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகளும் வெளியாகும்.