சென்னை: குற்ற நிகழ்வுகளில் ஈடுபடும் சிறுவர்களை சமுதாயத்தில் இருந்து ஒதுக்கி வைக்கும் நிலை மாறவேண்டும் என தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்தார்.
சிறார் குற்றங்கள் தடுப்பு மற்றும் அவர்களுக்கான மாற்று நடவடிக்கைகள் குறித்து 2 நாள் கருத்தரங்கம் சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், ஓய்வுபெற்ற நீதிபதி விமலா, யுனிசெஃப் அதிகாரி குட்லிகி லட்சுமண நரசிம்மராவ், சென்னை பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.ஏழுமலை, குற்றவியல் துறைத் தலைவர் சீனிவாசன்மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், டிஜிபி சங்கர் ஜிவால் பேசியதாவது
சிறார் சட்டங்கள் குறித்த விவரங்கள் கிராமப்புறத்தில் இருக்கும் மக்களுக்கு இன்னும் தேவைப்படுகிறது. சிறார்கள் கொலை, வழிப்பறிஉள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நிகழ்வு இன்றும் இருப்பது கவலை அளிக்கிறது. அதேபோல், சிறார்கள் குற்ற நிகழ்வுகளில் ஈடுபட்டால், அவர்களை சமுதாயத்தில் இருந்து ஒதுக்கி வைக்கும் நிலை மாற வேண்டும்.
சிறார்களின் நலனுக்காக, அரசு அமைப்பு மட்டும் இல்லாமல் பல்வேறு சமூக அமைப்புகளும் செயல்பட வேண்டியது அவசியம். சிறார்களுக்கு மனநல ஆலோசனை உள்ளிட்டவை வழங்க வேண்டும்.
சிறார் குற்றங்களைத் தடுக்க நீதித் துறை, சமூக அமைப்புகள் உட்பட அனைத்து தரப்பும் இணைந்து, அவர்களுக்கான நலன் குறித்து விவாதிப்பது மிகவும் அவசியமானது.
இவ்வாறு அவர் கூறினார்.