சென்னை: தமிழகம் முழுவதும் 100 இடங்களில் நடைபெற்று வரும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு முகாம் இன்றும் (டிச. 3-ம் தேதி) தொடர்ந்து நடைபெறும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் 6-வது வாரமாக நேற்று 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மழைக்காலசிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதேபோல், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் புதிய குடும்ப உறுப்பினர்களை சேர்க்கவும், பழைய காப்பீட்டு அட்டைகளை புதுப்பித்துக் கொள்ளவும் தமிழகம் முழுவதும் 100 இடங்களில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு சிறப்பு முகாம் நடந்தது. ராயபுரம்மற்றும் நீலாங்கரை பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட சிறப்புமுகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.