மிக்ஜாம் புயல் பாதிப்பு | மாநில அரசுகளுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியினர் செயல்பட வேண்டும் – ராகுல் காந்தி

புதுடெல்லி: மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்பால் தமிழகத்தில் சுமார் 8 பேர் பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் மிக்ஜாம் புயல் ஏற்படுத்தியிருக்கும் அழிவு மற்றும் உயிரிழப்பு தொடர்பான செய்திகளைக் கேட்டு வேதனை அடைந்தேன் என மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மிக்ஜாம் புயல் எதிரொலியால் சென்னையே வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரவலாக பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கபட்டிருக்கிறது. கனமழையால் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சென்னை ஆர் கே நகர், வேளச்சேரி பகுதியில் மழை நீர் சூழ்ந்ததால் வீடுகளுக்குள் சிக்கிக்கொண்ட மக்களை படகுகள் மூலம் போலீஸார் மீட்டு வருகின்றனர். மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்பால் தமிழகத்தில் சுமார் 8 பேர் பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விடிய விடிய மீட்புப் பணிகளும் நடைபெற்று வருகிறது. கடந்த காலத்தோடு ஒப்பிடுகையில் சென்னையில் வெள்ளத்தின் தாக்கம் இந்த முறை பெருமளவு குறைந்திருக்கிறது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில், தமிழகத்தில் மிக்ஜாம் புயல் ஏற்படுத்தியிருக்கும் அழிவு மற்றும் உயிரிழப்பு தொடர்பான செய்திகளைக் கேட்டு வேதனை அடைந்தேன். தங்களுடைய அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். மேலும் தமிழ்நாடு, ஆந்திர, ஒடிசா மாநிலங்களில் புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு, நிவாரணப் பணிகளில் மாநில அரசுகளுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியினர் செயல்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.