கடற்றொழிலாளர்களின் நலன்களையும், உரிமைகளையும் பாதுகாப்பதற்கும், உறுதிப்படுத்தவும் பல நடவடிக்கைகளை எமது அமைச்சு முன்னெடுத்து வருகின்றது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.
கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.
மேலும் உரையாற்றிய அமைச்சர்..
கடற்றொழில் அமைச்சானது, கடற்றொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டம், சேமிப்புத் திட்டம், காப்புறுதித் திட்டம் போன்றவற்றை முன்னெடுத்து வருகின்றது.
இதேவேளை, பொதுவாகவே தொழிலாளர்களின் நலன்கள், உரிமைகள் தொடர்பில் எனது பெரிய தந்தை மற்றும் மாமா ஆகியோர் பல போராட்டங்களை நடத்தியும், பல தளங்களில் குரல் எழுப்பியும் செயற்பட்டவர்கள். குறிப்பாக ஐ.எல்.ஓ அமைப்பான சர்வதேச தொழிலாளர் அமைப்புடனும் தொடர்புபட்டு செயற்பட்டவர்கள் என்பதால் தொழிலாளர்களின் நலன்கள், உரிமைகள் தொடர்பில் ஒரு தெளிவான புரிதல் இயல்பாகவே எனக்கு இருக்கின்றது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சர்வதேச தொழிலாளர் அமைப்புடன் பல நாடுகள் பல்வேறு விடயதானங்கள் தொடர்பில் ஒப்பந்தங்களைச் செய்துகொண்டுள்ளதைப்போன்று எமது கடற்றொழிலாளர்கள் தொடர்பாகவும் இணக்கங்களை ஏற்படுத்தும் ஒழுங்கு விதிகளுக்கான வரைபு ஒன்றை தயாரித்திருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.