கேரள மாநிலத்தில், சி.பி.எம் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் பினராயி விஜயன் இரண்டாவது முறையாக முதல்வராக உள்ளார். ‘நவகேரளா சதஸ்’ என்ற பெயரில் முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள் சொகுசு பேருந்தில் மக்களை சந்திக்க ஒவ்வொரு மாவட்டமாகச் சென்றுவருகின்றனர். கடந்த மாதம் தொடங்கிய இந்த நிகழ்ச்சியின் மூலம் இதுவரை சுமார் 3 லட்சத்துக்கும் அதிமான மனுக்கள் மக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம் முதல்வரும், அமைச்சர்களும் செல்லும் இடங்களில் எல்லாம் எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் சில அமைப்புகள் கறுப்புக்கொடி காட்டுதல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றன. கறுப்புக்கொடி காட்டுபவர்களை ஆளும் சி.பி.எம் கட்சியினரும், டி.ஒய்.எஃப்.ஐ அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்கும் சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து வருகின்றன. இந்த நிலையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த போராட்டக்காரர் என நினைத்து, தங்கள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகியையே சி.பி.எம் மற்றும் டி.ஒய்.எஃப்.ஐ தொண்டர்கள் தாக்கிய சம்பவம், கொச்சியில் அரங்கேறி உள்ளது. கொச்சி மரைன் டிரைவ் பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் நவகேரளா சதஸ் நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் பினராயி விஜயன் மேடைக்கு வருவதற்கு முன்பு அமைச்சர் ரோஸி அகஸ்டின் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது பார்வையாளர்கள் போன்று அமர்ந்திருந்த டெமாக்ரட்டிக் ஸ்டூடன்ட் அசோசியேசன் (D.S.A) அமைப்பைச் சேர்ந்த இரண்டு பேர், சில துண்டு பிரசுரங்களை அங்கு விநியோகித்ததுடன் கோஷங்களும் எழுப்பினர். அவர்களை சி.பி.எம் மற்றும் டி.ஒய்.எஃப்.ஐ நிர்வாகிகள் தாக்கி வெளியே இழுத்துச்சென்றனர். அந்த இருவரையும் போலீஸார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்ததுடன், அவர்கள்மீது வழக்கு பதிவும் செய்தனர். இந்த நிலையில் கோஷம் எழுப்பியவரின் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த எர்ணாகுளம் தம்மனம் கிழக்கு கிளை கமிட்டி சி.பி.எம் குழு உறுப்பினர் ரயீஸ் என்பவரையும், போராட்டக்காரர் என நினைத்து, அவர்மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.

மேடையின் முன்பு வைத்தும், வெளியே இழுத்துச்சென்றும் அடித்து உதைத்துள்ளனர். ‘நான் சி.பி.எம் நிர்வாகி’ என அவர் கத்தியும் விடாமல் தரையில் போட்டு மிதித்துள்ளனர். இதனால் மூச்சுவிட சிரமப்பட்ட ரயீஸை மீட்ட அவரின் உறவினர்கள், கடவந்தறையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். சொந்தக் கட்சியினரே தன்னை தாக்கியதால் மன வேதனையடைந்த ரயீஸ், சி.பி.எம் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கோஷம் எழுப்பிய இரண்டு பேரையும் தாக்கும்போது ரயீஸுக்கு ஒரு போன் வந்துள்ளது. அவர் போனை எடுத்து பேசியுள்ளார். அதைப் பார்த்தவர்கள், அவரும் போராட்டக்காரர்களுடன் வந்தவர் என நினைத்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்துவதாக சி.பி.எம் மாவட்டச் செயலாளர் மோகனன் தெரிவித்துள்ளர்.