சென்னை: மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மத்திய குழுவினர் இரண்டாவது நாளாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வின்போது, “நாங்கள் சேதங்கள் மற்றும் இழப்புகளை கணக்கிட்டு வருகிறோம்” என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி கூறியுள்ளார்.
சென்னை வந்த மத்திய குழுவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து சென்று, இரண்டாவது நாளாக புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட நன்மங்கலம் பகுதியில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: “சென்னை மற்றும் அதனை ஒட்டிய 4 மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும், அரசின் மீட்பு நடவடிக்கைகளையும் ஆய்வு செய்வதற்காக, இந்திய அரசின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள மத்தியக் குழுவில் பல்வேறு அமைச்சகங்களைச் சேர்ந்த 6 பேர் கொண்ட குழுவினர் வந்துள்ளோம். வெள்ள பாதிப்புகள் குறித்தும், மக்களுக்கு ஏற்பட்ட சிரமங்கள் மற்றும் அரசு என்ன தடுப்பு நடவடிக்கைகள் எல்லாம் மேற்கொண்டது என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.
மத்தியக் குழு தரப்பில் என்ன செய்ய முடியும் என்பதை புரிந்துகொள்வதற்காக இந்த ஆய்வு நடைபெற்று வருகிறது. புயலின்போது ஏற்பட்டுள்ள தவறுகள் என்ன, மக்களைப் பாதுகாக்க மாநில அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்தோம். நேற்று முழுவதும் மத்திய குழு ஆய்வு செய்தது. இன்றும் ஆய்வு செய்து வருகிறோம். வெள்ள பாதிப்புகளைத் தடுக்க மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் திருப்தியளிக்கிறது. நான் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்குள் சென்று பார்த்தேன். மக்கள் தங்களது ஏராளமான உடைமைகளை இழந்துள்ளனர். புயல் மற்றும் கனமழையால் தரைதளங்களில் வசித்த மக்களின் வீடுகளில் 10 முதல் 12 அடிவரை தண்ணீர் தேங்கியுள்ளது. அது துரதிர்ஷ்டமானது. அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை சிறப்பானதாக இருந்தபோதிலும், அதிகனமழை பெய்ததால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எம்எல்ஏக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் என அனைவரும் மக்களுக்கு உதவிகரமாக இருந்துள்ளனர். அரசு அதிகாரிகள் நேரடியாக களத்துக்கு வந்து பணியாற்றியது பாராட்டுதலுக்குரியது. NDRF,SDRF, சக பொதுமக்கள் என அனைவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர். தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தற்காலிகமாக செய்ய வேண்டியவை. எனவே, வருங்காலத்தில் சென்னையில் இதுபோன்ற பாதிப்புகளைத் தடுப்பதற்கான நிரந்தர திட்டமிடல் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.
இந்த ஆய்வின்போது, நாங்கள் சேதங்கள் மற்றும் இழப்புகளை கணக்கிட்டு வருகிறோம். உடனடியாக செய்ய வேண்டிய மீட்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரணங்கள் குறித்து ஆலோசித்து வருகிறோம். எனவே, சேதங்களைக் கணக்கிடும் பணி நடைபெற்று வருவதால், சரியான சேத மதிப்பை தற்போது கூற முடியாது. அனைத்து தகவல்களும் சேகரிக்கப்பட்டப் பிறகு, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, எங்களது அறிக்கையை சமர்ப்பிப்போம்” என்று அவர் கூறினார்.