பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் அஸ்ஸாமில், மதரஸாக்களை மொத்தமாக இழுத்து மூடுதல், வேறு பெயரில் பள்ளிகளாக மாற்றுதல் போன்ற வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் முதல்வர், ஹிமந்தா பிஸ்வா சர்மா. 2020-ல் அமைச்சராக இருந்தபோது , `அரசு நடத்தும் அனைத்து மதரஸாக்களும் பொதுக் கல்வி வழங்கும் பள்ளிகளாக மாற்றப்படும்’ என சட்டமன்றத்தில் மசோதா தாக்கல்செய்த ஹிமந்தா பிஸ்வா சர்மா, 2021-ல் முதலமைச்சரானதிலிருந்து தற்போதுவரை அதில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்.

மேலும், ஹிமந்தா பிஸ்வா சர்மா தாக்கல்செய்த மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்ட அடுத்த சில மாதங்களிலேயே, அதற்கான வேலைகளிலும் அரசு இறங்கியது. அதிலும், கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் மோரிகான் மாவட்டத்திலுள்ள ஒரு மதரஸா, பயங்கரவாத குழுக்களுடன் தொடர்புடையதாகக் கூறி ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதையடுத்து, தொடர்ச்சியாகப் பல மதரஸாக்களை ஹிமந்தா பிஸ்வா சர்மா மூடிவந்தார்.
மேலும், இந்த ஆண்டு மார்ச்சில் கர்நாடகாவில் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசிய ஹிமந்தா பிஸ்வா சர்மா, `600 மதரஸாக்களை மூடிவிட்டேன். ஆனால், மொத்த மதரஸாக்களையும் மூடுவதே என் நோக்கம்’ என்று பேசியிருந்தார். இந்த நிலையில், மாநிலத்திலுள்ள 1,281 மதரஸாக்களை, நடுநிலை ஆங்கிலப் பள்ளிகளாக பெயர்மாற்றம் செய்திருப்பதாக மாநிலக் கல்வி அமைச்சர் ரனோஜ் பெகு தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து, அமைச்சர் ரனோஜ் பெகு தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “அரசு மற்றும் மாகாண மதரஸாக்கள் அனைத்தும், அஸ்ஸாம் பள்ளிக் கல்வி வாரியத்தின்கீழ் (SEBA) பொதுப் பள்ளிகளாக மாற்றப்பட்டதன் விளைவாக, 1,281 மதரஸாக்கள், நடுநிலை ஆங்கிலப் பள்ளிகளாக, SEBA பெயர்மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன” என்று ட்வீட் செய்திருக்கிறார். இதன் அடுத்தகட்டம், ஏற்கெனவே மாநில பா.ஜ.க அரசு நினைப்பதுபோல அனைத்து மதரஸாக்களையும் மூடுவதுதான் என்று கூறப்படுகிறது.