தெலங்கானாவில், போலீஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் தன் மனைவி, மகன், மகள் ஆகியோரை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தற்கொலை செய்துகொண்ட அதிகாரி, மாவட்ட ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி, தற்போது சித்திப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் தனி பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வந்திருக்கிறார். இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் ஊரில் இல்லாததால் தனது சொந்த ஊருக்குத் திரும்பிய அதிகாரி, இன்று தன் மனைவி, மகன், மகள் ஆகியோரை சுட்டுக் கொன்றுவிட்டு இறுதியில் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து பேசிய சித்திப்பேட்டை போலீஸ் கமிஷனர் என் ஸ்வேதா, “உயிரிழந்த அதிகாரி 30 வயதுக்குட்பட்டவர். மாவட்ட ஆட்சியர் ஊரில் இல்லாததால், சின்னகோடூர் மண்டலத்திலுள்ள தனது சொந்த ஊரான ராமுனிபட்லாவுக்கு இவர் சென்றிருக்கிறார்.

இத்தகைய சூழலில்தான், இன்றுகாலை 11:30 மணியளவில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த அதிகாரிக்கு கடன் தொல்லை இருந்ததாகவும், அதுவே இதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் தெரிகிறது. இதில் மேலும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது” என்று கூறினார்.