எடுத்த காரியத்தை வெற்றியுடன் முடிக்கும் திறமையும் வலிமையும் கொண்ட மிதுனராசி அன்பர்களே…
அஷ்டம சனியாக அமர்ந்து இதுவரைப் பாடாய்ப் படுத்திவந்த சனிபகவான் இனி 9ம் இடம் சென்று லாபஸ்தானத்தில் அமரப்போகிறார். இதுவரை இருந்துவந்த சிக்கல்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக விடுபடப் போகின்றன. சம்பந்தமே இல்லாமல் ஏற்பட்ட அவப்பெயர் மாறும். ராசிக்கு 9 -ம் வீட்டில் ஆட்சிப் பெற்று வலுவாக அமரும் சனிபகவான் இனி உங்கள் வாழ்க்கை பிரகாசிக்குஜ். தோல்வியில் இருந்து வெற்றியை நோக்கிய பயணம் தொடங்கும். மனதில் சாதிக்கும் வல்லமை பிறக்கும். புதிய வீடு வாங்கும் எண்ணமும் அதற்கேற்ற திட்டமும் தோன்றும். அதற்கேற்பப் பணவரவு உண்டாகும்.

குடும்பத்தில் இருந்த சச்சரவுகள் நீங்கும். அமைதியும் நிம்மதியும் பிறக்கும். இதுவரை உறவினர்கள் வகையில் இருந்துவந்த மரியாதைக் குறைவான நிலை மாறி நல்ல மதிப்பும் ஏற்றமும் உண்டாகும். உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிரச்னை செய்த உறவினர்கள் விலகிப் போவார்கள். பிள்ளைகள் உங்கள் மனம் போல் நடந்துகொண்டு மகிழ்ச்சி தருவார்கள் மகன் அல்லது மகளின் அயல்நாட்டுக் கல்வி முயற்சிகள் வெற்றியாகும். திருமணம் எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு மணமாலை தோள் சேரும்.
பொருளாதார நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அடைக்க முடியாமல் திண்டாடிய கடன்கள் அடைபடும். பொதுநிகழ்ச்சிகளில் உங்களுக்கு கௌரவமும் பட்டமும் கிடைக்கும். சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளும் வாய்ப்பும் தேடிவரும். வழக்கில் சாதகமான போக்கே நிலவும். தந்தையின் உடல் நிலையில் மட்டும் அக்கறை காட்டுவது நல்லது.
சனிபகவானின் பார்வைப் பலன்கள்
சனிபகவான் உங்களின் 3-ம் வீடான சிம்மத்தைப் பார்ப்பதால் செயல்கள் அனைத்தும் அனுகூலமாக முடியும். முக்கிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள். அரசுவகையில் எதிர்பார்த்த அனுகூலம் உண்டு. ராசிக்கு ஆறாம் வீடான விருச்சிகத்தை சனிபகவான் சுறுசுறுப்பு அதிகரிக்கும். எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். ஆதாயம் அதிகரிக்கும். விட்டுப்போன சொந்த பந்தங்கள் தேடிவருவார்கள். சனிபகவான் 11 ம் வீடான மிதுனத்தைப் பார்ப்பதால் சாதுர்யம் அதிகரிக்கும். திடீர் பணவரவும் வாய்க்கும். உறவினர்கள் உங்களுக்குத் துணையாக இருப்பார்கள்.
வியாபாரம்: வியாபாரத்தில் இதுவரை இருந்து வந்த நஷ்டமான சூழ்நிலை விலகும். புதிய சரக்குகளைக் கொள்முதல் செய்து லாபம் ஈட்டுவீர்கள். விட்டுப்போன ஒப்பந்தங்கள் மீண்டும் கிடைக்கும். பணியாளர்கள் உங்கள் மனம் போல் நடந்துகொள்வார்கள். புதிய திறமையான வேலையாட்களைத் தேர்வு செய்வீர்கள். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். வங்கிக் கடன் அடையும். புதிய இடத்துக்குக் கடையை மாற்ற வாய்ப்பு தேடிவரும். கெமிக்கல், இரும்பு, பாசுமதி அரிசி, எண்ணெய் வகைகளால் லாபம் உண்டு.
உத்தியோகம்: இதுவரை பணியிடத்தில் இருந்துவந்த அசௌகர்யங்கள் நீங்கும். பணிச்சுமை கொஞ்சம் குறையும். உங்களின் திறமை பளிச்சிடும். அதற்கேற்ப சலுகைகளும் உயர்வும் கிடைக்கும். மேலதிகாரிகள் இனி உங்களுக்கு உரிய மரியாதை தருவார்கள். உங்களைப் பற்றிய தவறான அபிப்ராயம் மாறும். பதவி உயர்வு ஊதிய உயர்வு கிடைக்கும். சம்பள பாக்கி கைக்கு வந்து சேரும். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் பணி செய்பவர்களுக்கு நல்ல வேலையும் ஊதியமும் கிடைக்கும். சக ஊழியர்களின் தொந்தரவுகள் விலகும்.

பரிகாரம்: விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூர் செல்லும் பாதியிலுள்ள கல்பட்டு எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீசாந்த சனீஸ்வரரை புனர்பூசம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். வாய்ப் பேச இயலாதவர்களுக்கு உதவுங்கள். வாழ்வில் வளம் பெருகும்.
மொத்தத்தில் இதுவரை தலைகுனிந்து நடந்த உங்களைத் தலை நிமிர வைப்பதுண்டன் மனதின் ஆசைகளை எல்லாம் நிறைவேற்றித் தர இருக்கிறது இந்த சனிப் பெயர்ச்சி.