கர்நாடகாவின் ராமநகரா மாவட்டத்தில் தன் குழந்தையை ஆற்றில் வீசியதற்காகப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட 21 வயது பெண் பாக்யம்மா, சன்னபட்னா நகருக்கு அருகில் உள்ள பனகல்லி கிராமத்தில் வசித்து வருகிறார். போலீஸார் அளித்துள்ள தகவலின்படி, பாக்யம்மா தன் கணவரை விட்டுப் பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இவருக்கு ஒரு வயது 3 மாதங்களேயான தேவராஜ் என்ற குழந்தையும் இருக்கிறது. பெற்றோர் வீட்டில் வசித்து வந்த பாக்யம்மா அவரின் பெற்றோர் எதிர்த்த நிலையிலும் தகாத உறவை வளர்த்து வந்துள்ளார். தகாத உறவில் இருப்பவரைக் காண்பதற்காக குழந்தையைத் தனியாக விட்டுச்செல்வத்தை அவரின் அம்மாவும் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்.
பாக்யம்மாவிற்கு குழந்தை இருப்பதை அவரின் காதலன் விரும்பவில்லை. குழந்தையை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்று திட்டம் தீட்டிய பாக்யம்மா டிசம்பர் 19, செவ்வாய்க்கிழமை இரவு, துணி துவைக்கும் சாக்கில் வைத்துக் கட்டி, தன் குழந்தையை கண்வா ஆற்றின் அருகே அழைத்துச் சென்றுள்ளார்.
யாரும் பார்க்காதபோது குழந்தையை ஆற்றில் வீசிவிட்டு, வீட்டில் வந்து தற்செயலாகக் குழந்தை ஆற்றில் விழுந்து விட்டதாகவும், அலறி பக்கத்தில் உதவிக்கு அழைத்தும் யாரும் வரவில்லை என்றும் நடக்காத ஒரு நிகழ்வைச் சித்திரித்து இருக்கிறார்.

டிசம்பர் 20-ம் தேதி காலை அதிகாரிகள் குழந்தையின் சடலத்தை மீட்டனர். போலீஸாரின் விசாரணையில், பாக்யம்மா அவரின் தாயுடன் சண்டையிட்டது மற்றும் அவரது உறவு குறித்தும் தகவல் கிடைத்துள்ளது.
விசாரணையில், பாக்யம்மா தன் தகாத உறவிற்காக குற்றத்தைச் செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். காவல்துறை அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.