மாநிலங்களவையிலும் நிறைவேறியது தொலைத்தொடர்பு மசோதா

புதுடெல்லி: ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட தொலைத்தொடர்பு சட்டத்துக்கு மாற்றாக புதிய சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு மசோதா மாநிலங்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. தொலைத்தொடர்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், வளர்ச்சி, தொலைத்தொடர்பு சேவை, தொலைத்தொடர்பு வலைப்பின்னல் (நெட்ஒர்க்ஸ்), அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீடு ஆகியவற்றை ஒருங்கிணைத்து கொண்டு வரப்பட்ட மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் இதனை அறிமுகப்படுத்தினார். இந்த மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டு குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா நேற்று (புதன் கிழமை) மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை நியமனத்தை ஒழுங்குபடுத்தும் சட்ட மசோதா மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. தலைமைத் தேர்தல் ஆணையர் நியமனம், தேர்தல் ஆணையர்கள் நியமனம், அவர்களது சேவைக் காலம், பதவியில் இருக்கும்போது அவர்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் தொடர்பாக இந்த மசோதா கொண்டு வரப்பட்டது. இந்த மசோதா மாநிலங்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நிலையில், மக்களவையில் இன்று நிறைவேறியது.

இதேபோல், பத்திரிகைகள், இதழ்கள் ஆகியவற்றை பதிவு செய்வதற்கான சட்ட மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் மக்களவையில் அறிமுகப்படுத்தினார். இது தொடர்பாக ஏற்கெனவே உள்ள பத்திரிகைகள் மற்றும் புத்தகங்கள் பதிவுச் சட்டம் 1867-க்கு மாற்றாக இந்தச் சட்டம் கொண்டுவரப்பட உள்ளது. இந்த மசோதா ஏற்கனவே மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..

மக்களவையில் அமளியில் ஈடுபட்டதால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டி.கே. சுரேஷ், நகுல் நாத், தீபக் பைஜ் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவையில் மோசமாக நடந்து கொண்டதால் மூவரும் இடைநீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். இதன்மூலம், நாடாளுமன்றத்தில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள எதிர்க்கட்சி எம்.பிக்களின் எண்ணிக்கை 146 ஆக உயர்ந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.