2024-ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் மினி ஏலம் நடந்து முடிந்திருக்கிறது.
ஒவ்வொரு ஐ.பி.எல் தொடரிலும் பல வெளிநாட்டு வீரர்கள் எடுக்கப்படுவார்கள். அந்த வகையில் ஐ.பி.எல் ஏலத்தில் சி.எஸ்.கே அணியால் 14 கோடி ரூபாய்க்கு டேரில் மிட்செல் ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் 14 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட டேரில் மிட்செல், “தன்னுடைய 2 மகள்களும் அவர்களுக்குப் பிடித்த வாழ்க்கையை வாழ்வார்கள்” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார். தற்போது அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது குறித்துப் பேசிய அவர், “நான் ஏலத்தில் எடுக்கப்பட்ட அன்றைய தினம் என் பெரிய மகளின் 5வது பிறந்தநாள். மிகப்பெரிய தொகைக்கு நான் ஏலத்தில் எடுக்கப்பட்டிருப்பது என் மக்களுக்கு இப்போது புரியாது. இந்தத் தொகை என் குடும்பத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். எனது இரண்டு மகள்களும் அவர்களுக்குப் பிடித்த வாழ்க்கையை வாழ்வார்கள். எனக்கு அது போதும்! என் மனைவியுடன் உட்கார்ந்து முழு ஏலத்தையும் நான் பார்த்துக்கொண்டிருந்தேன்.
என் பெயர் ஐபிஎல் ஏலத்தில் வருவதைப் பார்ப்பதும், கடைசிவரை படப்படப்பாக இருந்ததையும் மறக்க முடியாது. கடந்த ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்படாமல் போன பிறகு, இந்த முறை இந்த வெற்றியை அனுபவிப்பது மிகவும் சிறப்பான ஒன்றாக இருக்கிறது” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.