தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விருதுநகர் மாவட்டம் விருதுநகர், சாத்தூர், சிவகாசி, திருநெல்வேலி , தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், திருவேங்கடம், வேலூர் மாவட்டம் குடியாத்தம், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில தீப்பெட்டி உற்பத்திதான் முக்கியத் தொழிலாக உள்ளது. தமிழகம் முழுவதும் 50 முழு இயந்திர தீப்பெட்டி ஆலைகளும், 320 பகுதி நேர இயந்திர தீப்பெட்டி ஆலைகளும், 2,000-க்கும் தீப்பெட்டி பேக்கிங் சார்பு ஆலைகளும் இயங்கி வருகின்றன.

இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இத்தொழிலில் 90 சதவீதம், பெண்கள்தான் பணிபுரிந்து வருகின்றனர். தமிழகத்தில் தயாரிக்கப்படும் தீப்பெட்டிகள், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு மட்டுமின்றி, பல்வேறு நாடுகளுக்கும் அதிகளவு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டிகளில் 90% இங்கிருந்துதான் உற்பத்தி செய்யப்படுகிறது.
மூலப்பொருள்களின் விலையேற்றத்தால் இத்தொழில், கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த மழை மற்றும் வெள்ளப் பெருக்கினால் தீப்பெட்டிஉற்பத்தித் தொழில் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் சேதுரத்தினத்திடம் பேசினோம்,

“தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான குச்சிகள் தயாரிக்கும் ஆலைகளில் உள்ள இயந்திரங்களில் மழைநீர் புகுந்ததால் குச்சி உற்பத்தி தடை பட்டுள்ளது. உற்பத்தி தொடங்கப்பட்டாலும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதலும், வெயில் இல்லாததாலும் குச்சிகளைக் காய வைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. குச்சியை காய வைக்க முடியாத நிலை உள்ளது. தீக்குச்சி மருந்து மற்றும் அட்டை பெட்டிகளையும் காய வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
சில கம்பெனிகள், தங்களிடம் இருப்பில் உள்ள குச்சிகளை வைத்து உற்பத்தியை தொடங்கினாலும் பணியாளர்களின் வருகை குறைவாக உள்ளது. தொடர் மழையினால் பல கிராமங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து வசதி இல்லாமல் தொழிலாளர்கள் வேலைக்கு வர முடியாத சூழ்நிலை உள்ளது. பொதுவாக கோவில்பட்டியில் உற்பத்தி செய்யக்கூடிய தீப்பெட்டிகள் தூத்துக்குடி துறைமுகம் மூலமாக தீப்பெட்டி பண்டல்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

மழையால் தூத்துக்குடி கடுமையாக பாதிப்பினை சந்தித்துள்ளதால் தூத்துக்குடி வ.உ,சிதம்பரனார் துறைமுகம் வழியாக வெளிநாடுகளுக்கு தீப்பெட்டி ஏற்றுமதி செய்வதும் தடைபட்டுள்ளது. மழை மற்றும் வெள்ளத்தால் சுமார் 100 கோடி ரூபாய் வரை தீப்பெட்டி உற்பத்தி முடக்கம் மற்றும் பண்டல்கள் தேக்கம் ஏற்பட்டுள்ளது. ” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.